பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/311

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராஜம் கிருஷ்ணன்

309

வருகிறது கும்பல், கொட்டகை முன் ஒலிபெருக்கி, கரகர ஒலிக்கட்டியத்துடன் பயத்துடன் சினிமாப் பாட்டொன்றை முழக்குகிறது. “லே லங்கடி, லே லேங்கடி லேலோ... வாங்க மச்சான் வாங்க...”

சாலையிலே, மச்சான்களும் மாமன்மாரும் மாமியரும் தம்பி தங்கச்சியரும் சாரிசாரியாக வந்து கொண்டிருக்கின்றனர் கொட்டகைக்குப் பின்னே ஏரிக்கரை மேட்டுக்கு அப்பால் முட்டு முட்டான குடிசைகளிலிருந்தும் குடிசைகளுக்கப்பால் விரிந்து கிடக்கும் வயல் வரப்புகளிலிருந்தும் சாலையின் கிழக்கே குவிந்து நெருங்கும் குடியிருப்புகளிலிருந்தும் அந்தக் கீற்றுக் கொட்டகை முகப்புக்கு வந்து காத்திருக்கின்றனர். வரிவரியாய்க் கறுப்புச் சிவப்பு பனியன்கள், பளபளப்புச் சட்டைகள், தேங்காய்ப்பூத் துவாலைகள், போலிப்பட்டுச் சேலைகள், கனகாம்பரக் கொண்டைகள், அழும் குழந்தைகளுக்குப் பால் புட்டிப் பைகள் என்றெல்லாம் திருநாள் பவனியல்லவா போகிறது.

“நேரமாயிடுச்சி, ஓடு ஓடு, பத்து டிக்கெட்வாங்கி வையி!” என்று ஒரு கட்டை வண்டிக்கூட்டம் ஒரு தேங்காய்ப் பூத்துவாலை இளைஞனை விரட்டுகிறது. கொட்டகையின் முன் ஒரு பெட்ரோமாக்ஸ் விளக்கொளியைச் சூழ்ந்து கொண்டிருக்கிறது ஒரு கும்பல். அங்கே என்ன, சுண்டல் வடை வியாபாரமா? அரும்பு மீசைப் பருவங்கள் அப்படிக் குழுமியிருக்க இளவெட்டுப் பெண் பாயசம் விற்கிறாளா? இல்லை...

‘மேகநாட்டு இளவரசி’ பாட்டுப் புத்தக வியாபாரம்தான்.

குடிசைக்குள் எங்கேனும் திருட்டுக்கள் இருக்கலாம். கூடைக்குள் வைத்து எந்தப் பெண்ணேனும் திருட்டு வியாபாரம் செய்பவளாக இருக்கலாம்.

ஆனால் இத்தனை திருநாள் கொள்ளை, கள்ளை எடுக்குமுன் இருந்ததா? அப்போது பூவேது, பொட்டேது, உல்லாச ஓட்ட மேது? கையிலே காசு இருந்ததா? பையிலே அழும் குழந்தைக்குச் சீனி மிட்டாயும் பால் புட்டியும் வைத்துக் கொண்டு சினிமாவுக்கா வந்தார்கள்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/311&oldid=1101392" இலிருந்து மீள்விக்கப்பட்டது