பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/314

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

312

ரோஜா இதழ்கள்

கொட்டகை அதிரக் கைகொட்டல்.

பருத்த தனங்கள் எடுப்பாகத் தெரிய, கச்சணிந்த இடை தெரிய அரைக்கட்டு உடையுடன், மேகக் கூந்தல் சிங்காரி ஒருத்தி, பருத்த தோள்களைக் குலுக்கி, கண்களைச் சுழற்றி நெளிந்து கொண்டு பணிப் பெண்கள் பலர் சூழக்கோயிலுக்கு வருகிறாள். கோயிலில் ஒரு அர்ச்சகர், தொந்தி தெரியப் பஞ்சகச்சம் உடுத்தி, நெற்றியிலும் கைகளிலும் மார்பிலும் பட்டை பட்டையாகத் திருநீறு அணிந்திருக்கிறார். அவர் கோயிலுக்கு வந்த பெண்ணைத்தகாத நோக்குடன் பார்க்க அவள் மருண்ட மான்போல் கண்களைக் காட்டி, உடலை நெளித்து, ஓட முடியாமல் சிக்கிக் கொண்டாற்போல் அபயக் குரல் கொடுக்கையில் அந்தக் கொள்ளைக்காரக் குதிரை வீரன் தொம்மென்று அங்கே குதிக்கையில் கொட்டகையில் ஒரே ஆரவாரம்; சீழ்க்கை ஒலி. உடனே அந்த வீரன் கல்லுச் சாமியின் காவலனாக நடித்துக் கன்னியரை வலைவீசக் காத்திருக்கும் கயவர்களைப்பற்றி ஒரு காரசாரமான சொற் பொழிவை அடுக்கு மொழியில் பொழிகிறான். மக்கள் அந்தச் சொற்பொழிவைக் கைதட்டி ஆரவாரம் செய்து ரசிக்கின்றனர். பிறகு அந்தப் பெண்ணும் கள்ளனும் தோட்டத்தில் காதல் புரிகின்றனர். தனித்தனியாக முகத்தோடு முகம், உடலோடு உடல், பல கோணங்களில் இணைந்த குளோஸ் அப் காட்சிகளுடன் இரு குரலிசை வழங்குகின்றன.

“வசந்தம் வந்தது ஏனோ இங்கே கன்னித்தேனே”

“வண்டார் வந்து மலரை முகர்ந்ததால் சின்னராஜா.”

உய் உய் என்ற சீழ்க்கையொலிகள், கைத்தாளங்கள்; கால் தாளங்கள்...

வேல்சாமி ஏதேனும் சாமி படமென்றால் தவறாமல் செல்வார் அந்தக் காலத்தில். பக்தகுசேலர், கந்தலீலா, பட்டினத்தார், சக்ரதாரி போன்ற படங்களை அவர் ரசித்துப் பார்த்திருக்கிறார். வேமன படம் பார்த்துவிட்டு வந்து அழுதிருக்கிறார்.

இதெல்லாம் சினிமாவா? சை!...

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/314&oldid=1101397" இலிருந்து மீள்விக்கப்பட்டது