பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/315

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராஜம் கிருஷ்ணன்

313

வேல்சாமி வெளியே எழுந்து வருகிறார்.

“என்ன மாமா ? படம்புடிக்கலியா...?”

தங்கவேலு பணத்தை எண்ணித் தோற்பைக்குள் வைத்துக் கொண்டு இருக்கிறான்.

“நான் வாரேன் தம்பி...”

“...செய்யுங்க மாமா...”

தேநீர்க் கடையில் ஒரு தேநீரருந்தலாம் என்று நடக்கிறார் இரண்டாவது ஆட்டத்துக்கு மூலைமுடுக்குகளிலிருந்து மக்களைக் கொண்டு வந்து கொட்டிவிட்டுப் பஸ் ஒன்று நிற்கிறது. பொதுக் கூட்டம் இன்னமும் முடியவில்லை போலும்! பேச்சொலி தெளிவில்லாமல் விழுகிறது.

தேநீர்க்கடை என்று வெளிக்குத் தெரிந்தாலும், அது தேநீர்க்கடை மட்டுந்தானா என்று வேல்சாமிக்கு ஐயம் தோன்றுகிறது.

தெருவில் ஒளி பொழியும் விளக்குக்கு எட்டாத ஓரமாய், இருபதோ, பதினைந்தோ, மஞ்சளாய் அழுது வடியும் விளக்கொளியில் கம்பி நாற்காலியில் ஒருவன் கலங்கிய விழிகளும் பெரிய மீசையுமாக வீற்றிருக்கிறான். அவன் கையில் ஒரு காலிக்கிளாசு இருக்கிறது. இன்னொருவன் தேநீருக்காகக் காத்திருக்கிறான் போலிருக்கிறது. கறுப்புப் பனியன் போட்ட பையன் பீஸ் கிழிப்பதுபோல் அரை தம்ளர் தேநீரை ஆற்றுகிறான். முடியில் பூரான் புகுந்தால் தெரியாத அடர்த்தி, அப்போது கட்டம் போட்ட கைலி யுடன் கட்டைத் தொண்டையில் ஒரு சாயாவுக்கு ஆர்டர் கொடுத்துக்கொண்டு ஒருவன் வந்து நிற்கிறான்.

“பொதுக்கூட்டத்துக்குப் போகலியா அண்ணாச்சி” என்று அவன் கட்டைக் குரலில் கேட்கையில் மீசைக்காரன் அடித்தொண்டையிலிருந்து கனைக்கிறான். அது உறுமலைப் போலிருக்கிறது.

“பொண்ணு யாரு தெரியிதாரா?...”

“நீங்க சொன்ன அதே வகைதான் அண்ணாச்சி.”

அண்ணாச்சி மீசையை முறுக்கிக் கொள்கிறான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/315&oldid=1101400" இலிருந்து மீள்விக்கப்பட்டது