பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/317

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராஜம் கிருஷ்ணன்

315

ஆங்காங்கு இணையும் கூட்டுக்கட்சித் தோழருடன் அவள் சுற்றுப்பிரயாணம் செய்கிறாள். மொட்டைத்தலைக் கணவர் அந்த ஊர்ப் பக்கம் தலைநீட்ட அஞ்சி ஒளிந்துகொள்கிறார். மைத்ரேயிக்கு உணவு, உறக்கம், ஓய்வு குறைந்து, நலம் குன்றினாலும் உற்சாகம் குன்றவில்லை. அது ஒரு வெறிபோல் தானிருக்கிறது. கால்மணிக்கு அவளுக்கு முப்பது ரூபாய் என்று சீனிவாசன் பேசியிருக்கிறான்.

ஸ்டார் ஸ்பீக்கர் என்று பெயர் பெற்ற அழகிய மணவாளனுக்கு இருபத்தைந்து ரூபாய்தான். அவனுக்கு மவுசு குறைந்துவிட்டது. பதினேழு வருஷங்களாகப் பேசும் தொழிலில் கொட்டைபோட்ட அவன் பெயரை, அவள் பெயருக்குக் கீழே சிறிய எழுத்தில் போடுகிறார்கள். பத்திரிகைக்காரன் அச்சில் அவன் பேரைப் போடாமலே விட்டு விடுகிறான். அவன் உள்ளுர வெந்து குமுறினாலும் வெளிக்கு வெற்றிலைச் சாறு துளும்பாமல் சிரிக்கிறான் அழகாக. தனராஜ் எதிர்பாராமல் மேடையில் வந்து சிரிக்கப் போகிறானே என்ற நடுக்கம் அவளுக்கு இப்போதெல்லாம் இல்லை. “செல்வி மைத்ரேயி அவர்கள்”... என்று அவன் முன்னிருந்து அவளைக் குறித்துச் சொல்லுவதும் மைத்ரேயி, “கூட்டுக்கட்சித் தோழர்கள்...” என்று குறிப்பிட்டு வாக்குகளைக் கேட்பதும் மிகவும் பழகியதாகிவிட்டன. அக்காவும் அத்திம்பேரும், தங்கள் வீட்டுத் தோட்டத்தில் ஒர்(அரசியல்) விருந்து வைத்ததும், அதற்கு லோகா தம்பதியுடன் தனராஜையும் வரவேற்று, மைத்ரேயியையும் உபசாரம் செய்ததும் அவளைத் திணற அடித்தன. ஞானத்தைத் தேடி வந்து பேசவே, மைத்ரேயிக்கு நேரம் இல்லை. எல்லாம் புதிய அநுபவங்களாக வந்து பழகுகின்றன. எதிர்க்கட்சியாளரின் சவால்களுக்குப் பதில் கூற, கொள்கையளவில் மக்களுக்கு விளக்கம் கொடுக்க அவள் நிறையப் படித்துத் தெரிந்து கொள்கிறாள். ஒரு குறிப்பிட்ட பிராந்தியத்தின் சில்லறைச் சச்சரவுகளில் அவள் தலையிட்டுக் கொள்வதில்லை. கொள்கைகளைப்பற்றி எவ்வளவு நல்லவிதமாக, எளிய முறையில் அவள் விளக்கம் கூறினாலும், குழுமியிருக்கும் மக்கள் வெறுமே முகவிலாசத்தை மட்டுமே கவனிப்பதாகச் சில சமயங்களில் அவ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/317&oldid=1101404" இலிருந்து மீள்விக்கப்பட்டது