பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/318

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

316

ரோஜா இதழ்கள்

ளுக்கு ஐயம் தோன்றுகிறது. அழகிய மணவாளனின் பேச்சு முற்றிலும் வேறு வகையாகவே இருக்கிறது. அவன் ஊர் விவகாரங்களில் புகுந்து தனி நபர்மீது அவதூறு தொடுப்பதில் மன்னன்.

நம்ப இயலாத அப்பட்டமான பொய்யை அடுக்க அவன் அஞ்சுவதில்லை.

“ஒரு தனிப்பட்ட மனிதரின் மீது அவதூறு கூறாதீர்கள், நம் வேட்பாளரின் தகுதியைச் சொல்லி ஒட்டுக் கேளுங்கள்.” என்று மைத்ரேயி ஒவ்வொரு முறையிலும் கூறுவது வழக்கம்.

“இத பாருங்கம்மா, நீங்க இன்னிக்குத்தான் மேடையேறி இருக்கேள். பதினேழு வருஷமா நான் மேடை ஏறி இருக்கேன். நான் பேசின கட்சி இன்னிவரை மெஜாரிட்டிலதான் வந்திருக்கு. உங்க படிப்பு, அறிவு, கொள்கை விளக்கம் இதெல்லாம் நிச்சயமாக இங்கே கைகொடுக்கப் போறதில்ல. அதனால் உங்க பாட்டைப் பாத்திண்டு என்னை விடுங்கோ” என்று அவன் கூறுகிறான். அவன் இறங்குமளவுக்கு, கூட்டுக் கட்சித் தம்பிகள் கூட இறங்கிப் பேசாதது கண்டு அவள் வியப்படைகிறாள். அன்று தேர்தல் நாளுக்கு முந்தைய கடைசி நாள் கூட்டம். அன்று நிலைகொள்ளாத சுற்றுப் பிரயாணமாக இருக்கிறது.

இரவு எட்டரை மணிக்கு சீனிவாசனின் தொகுதியில் அவள் பேச வந்திருக்கிறாள். அவள் மேடைக்கு வரும்போது, அழகிய மணவாளன் வழக்கம்போல் பேசிக்கொண்டிருக்கிறான். சீனிவாசன் இருக்கிறான். வெங்கிடாசலம் தலைமை வகிக்கிறார். கடைவீதி முச்சந்தியில் அந்தக் கூட்டம் நடைபெறுகிறது. கணிரென்ற குரலில் அழகிய மணவாளன் எதிர்க்கட்சி வேட்பாளரைத் தாக்குகிறான்.

“இந்த இராஜ பூசணி-பூசணிக்காய் அம்மாள், யாரு? அவ அப்பன் யாரு ? காந்தி இறந்துபோன அன்று பூந்தி வாங்கி வழங்கியவன் அப்பன். ஐயா, காந்தி இறந்தபோது, நாடே கண்ணிர் விடுகிறது; கதறியழுகிறது. சோறும் நீரும் மறந்து சோர்ந்து புலம்புகிறது. இந்த அம்மாளின் அப்பன் என்ன செய்தார்? சுத்தி இருந்தவர்கள் எல்லாரையும் கூப்பிட்டார். பொட்டலம் பொட்டலமாகப் பூந்தி.பூந்தி ஐயா...”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/318&oldid=1100811" இலிருந்து மீள்விக்கப்பட்டது