பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/319

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராஜம் கிருஷ்ணன்

317

"பூந்தி” என்று அவன் அடுத்து உச்சரிக்குமுன் குறி பார்த்து ஒருகல் பறந்து வந்து அவன் நெற்றியைத் தாக்குகிறது. குருதி பொழிகிறது. அப்படியும் அவன் விடவில்லை. ஒலி பெருக்கித் தண்டைப் பற்றிக் கொண்டு இன்னும் உரத்த பயங்கரக் குரலில் “உண்மையைச் சொன்னால் கல்... பார்த்தீர்களா, இன்றைய ராஜ்யத்தில்...?”

கற்கள் தொடர்ந்து விர்விர்ரென்று மேடையை நோக்கிப் பறந்து வருகின்றன.

கூட்டத்திலிருப்பவர்களே கல் வீசுகிறார்களோ என்று மைத்ரேயி நினைக்குமுன் அவள் மீதும் கல்படுகிறது. அழகிய மணவாளனின் ஜிப்பா கிழிந்து நெற்றியில் இரத்தம் பெருகுகிறது. வெங்கிடாசலம் ஓட்டமாக ஓடுகிறார். சீனிவாசன் தலைமீது கைகளைப் போட்டுக்கொண்டு தப்பி ஓடுகிறான். மைத்ரேயி நிலைமையைச் சமாளிக்க ஒலிபெருக்கியின் முன் குரலெழுப்பப் பார்க்கிறாள். போலீசு உள்ளே புகுந்து அகப்பட்டவர்களை அதற்குள் தடியால் அடிக்கிறது. அப்போது தான் ஒரு கிழவன் மைத்ரேயியின் கையைப்பற்றி இழுத்துக் கொண்டு ஓடுகிறான். அவளால் அந்தப் பிடியிலிருந்து திமிற முடியவில்லை.

“சுத்த கயவாளிப் பசங்க, தெம்பில்லாதவங்க, ஏறும்மா,வண்டிலே!” என்று அதட்டுகிறான். அங்கே நல்ல ஒளியில்லை. ஏதோ ஒரு கறுப்பு வண்டி நிற்கிறது. ஓட்டி இருக்கையில் அமர்ந்திருக்கிறான்.

“இது...யார் வண்டி?” என்று பீதியுற்ற மைத்ரேயி நடுக்கம் மாறாமலே வினவுகிறாள். “எல்லாம் நெம்ம வண்டிதான். ஏறம்மான்னா, ஏன் நிக்கிறே? உன் நெல்லதுக்குத்தான் சொல்றேன்!”

மைத்ரேயி அந்த அதட்டலுக்குக் கட்டுப்பட்டாற்போல் வண்டியில் ஏறி உட்காருகிறாள். கிழவன் முன் பக்கத்தில் அமர்ந்து கொள்கிறான்.

அந்த முகத்தை மைத்ரேயி நினைவுபடுத்திக் கொள்ள முயற்சி செய்கிறாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/319&oldid=1101407" இலிருந்து மீள்விக்கப்பட்டது