பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/321

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராஜம் கிருஷ்ணன்

319

மளவுக்கு ஒருசந்து பின்பக்கம் செல்கிறது. அந்தப் பாதையில் அவளை அவன் நடத்திச் செல்கிறான். மைத்ரேயி மனசுக்குள் உறுதியைத் திரட்டிக் கொள்ள முயலுகிறாள். எனினும் நெஞ்சு உலர்ந்து போகிறது. வீட்டில் யாருமே இல்லையோ என்றெண்ணுகிறாள். நீண்ட தாழ்வறை; கிணறு தானியம் சேமித்து வைக்கக்கூடிய அறைபோன்று ஒரு கட்டிடம், மங்கலான நிலவொளியில் தெரிகிறது.

அவன் அதைத் திறந்து, “உள்ளே போம்மா !” என்று ஆணையிடுகிறான்.

கிழவன் வஞ்சகமாக நடந்து கொள்கிறானா, மாற்றுக் கட்சிக்காரனா, வேண்டுமென்று கடத்தி வந்திருக்கிறானா என்றெல்லாம் சிந்தித்தாலும் ஒரு முடிவுக்கும் வர இயல வில்லை. கிழவனைப் பயங்கரமானவனாக ஏனோஅவளால் எண்ண முடியவில்லை.

“இது யார் வீடு? என்னை எதற்காகச் சிறை செய்வதற் குக் கடத்திவருவதுபோல் இங்கே கூட்டி வரவேணும் ? எனக்கு இப்படி ஒளியத் தேவையில்லை! என்னால் யாரையும் எதிர்க்க முடியும்?” என்று அவள் வாய்ச்சவடால் அடித் தாலும் உள்ளுற நடுக்கம் கொல்லுகிறது.

“எதிர்ப்பே...! இன்னாத்தை எதிர்ப்பே?” என்று கிழவன் கேலி செய்கிறான். “ஏம்மா இப்படி வகையில்லாம வந்து மேடையில் நின்று கூச்சல் போடுறே? காங்கிரஸ்காரனுக்கு ஒட்டுப்போடாதேங்குறியே? உனக்கு என்ன தைரியம் ? உனுக்குஎன்னா தெரியும் அத்தெப்பத்தி? அந்தப் பயலுக, உங்க எனத்தையே வேரறுப்போம்னு சொல்லிக்குதிச்சானுவ, அவனுக கூடக் கூடிட்டு, ஏம்மா வகைதெரியாம சாவுறிங்க? உங்க பாட்டன் முப்பாட்டன் வந்தாலும் இங்க காங்கிரசை ஒண்ணும் பண்ணமுடியாது. உன்றமானம் உயிரு தப்பணும்னு பத்திரமாகக் கூட்டியாந்தேன். எனக்குப் பேத்தி வயசிருப்பே. நெல்ல குலத்தில் பிறந்திட்டு ஏம்மா அத்தெ பாழு படுத்திக்கிறே?”

மைத்ரேயி மரக்கிளையிலேறிப் புயலுக்குத் தப்ப நினைத்ததாக நிலைமையைப் புரிந்துகொள்கிறாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/321&oldid=1101409" இலிருந்து மீள்விக்கப்பட்டது