பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/324

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

322

ரோஜா இதழ்கள்

தானிருப்பேன்னா சொல்லிட்டிரு. நெல்லபடியா நான் சொல்லி நீ கேக்கலே” என்றவன் மின்னல் வேகத்தில் அவளை அறைக்குள் இழுத்துத் தள்ளிவிட்டுக் கதவைச் சாத்திவிடுகிறான்.

அவளுடைய எதிர்ப்புக்கள் ஆற்றோட்டத்தை எதிர்க்கும் சருகிலைகளாகின்றன.

வானமே கருந்திரையாய்த் தனக்கும் வெளிஉலகுக்கும் இடையேபேரொலியுடன் வந்து விழுந்து விட்டாற் போல் அவள் விக்கித்துப் போகிறாள்.

கதவைப் படபடவென்று தட்டுகிறாள். “தாத்தா ? தாத்தா...! கதவைத் திறங்க, தாத்தா...?” என்று கத்துகிறாள்.

எதிரொலியே இல்லை. அறைக்குள் அவன் இழுத்துத் தள்ளியபோது வீழ்ந்த தனால் முழங்காலில் அடிபட்டு எரிச்சல் மண்டுகிறது. கரகர வென்று கண்ணிர் வழிந்து கன்னங்களை நனைக்கிறது.

“சே! கண்ணிர் விடுகிறேனே!” என்று துடைத்துக் கொண்டு திரும்பவும் பலம்கொண்ட மட்டும் கதவைத் தட்டுகிறாள்.

பயனில்லை.

உள்ளே இருட்டாகயிருக்கிறது. சுவரில் தடவிப் பார்க்கிறாள். மின்விசைப் பித்தான் ஒன்றும் தட்டுப்படவில்லை.

புதிய சுண்ணாம்பு உள்ளே நெடியடிக்கிறது. கீழே சிமிட்டி மணல் சொரசொரவென்று உறுத்துகிறது. புதியதாகக் கட்டிய அறையாக இருக்கலாம். ஒர்புறம் சாக்கு மூட்டைகள் தட்டுப்படுகின்றன. வைக்கோலும் புலனாகிறது.

மாட்டுத்தீவனம் அடைத்திருக்கும் அறை அது.

யாருடைய வீடு: ராஜபூஷணியின் வீடுதானோ என்னமோ?

அவளுடைய கையாட்கள்தாம் இத்தகைய இழிசெயலைச் செய்திருக்கிறார்களா? எதிர்க்கட்சி ஆட்களை இப்படிக் கடத்திச் சென்று அடைத்துவைக்கும் நிலைக்கு, ஒரு தேசிய ஸ்தாபனமாக விளங்கிய கட்சி வளர்ந்திருக்கிறது. தியாகத்திலும் அஹிம்சையிலும் மாற்றானை ஊறு செய்யாமல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/324&oldid=1100064" இலிருந்து மீள்விக்கப்பட்டது