பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/327

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராஜம் கிருஷ்ணன்

325

கதவை பலம்கொண்ட மட்டும் தட்டுகிறாள்.

கைதான் நோகிறது. உள்ளே ஏதேனும் கல், கட்டி மரம் இருக்குமோ என்று தடவிப் பார்க்கிறாள். ஒன்றும் தென்படவில்லை. இடித்து இடித்துச் சோர்ந்தவள் தன் தொண்டை எட்டும் வரையிலும் உரத்த குரலில் கத்துகிறாள்.

“ஸார்!... ஸார்!...

அம்மா...! அம்மா...! யாரேனும் வந்து கதவைத் திறங்களேன் ?”

தாழ்வரையில் செருப்பொலி கேட்பது போலிருக்கிறது.

கூர்ந்து கேட்டுவிட்டு மீண்டும் உரக்கக் கத்துகிறாள்.

“தாத்தா? கதவைத் திறங்க, தாத்தா...”

வராந்தாவில் யாரோ விளக்கைப் போடுகிறார்கள் என்று தோன்றுகிறது.

அவள் நம்பிகைத் திரியைத் துண்டிக் கொண்டு கதவை இடிக்கிறாள்.

“யார் கதவைப் பூட்டினார்கள்? யார் உள்ளே? குரல் மெதுவாகத்தான் செவிகளில் விழுகிறது. கிழவன் இல்லை.

‘மர்மக் கதைகளில் வருவதுபோலிருக்கிறதே?’ “என்னைத் திறந்துவிடுங்கள்! யாராயிருந்தாலும் திறந்து விடுங்கள்!” கெஞ்சியவளுக்கு உடனே திகில் கவ்விக்கொள்கிறது. ராஜ பூஷணியின் ஆட்களே எவரேனும் வந்திருப்பார்களோ? கடகட வென்ற சிரிப்புச் சத்தத்துடன் மீசையை முறுக்கிக் கொண்டு ஒரு முரட்டு ஆள் அவளைத் தகாத பார்வையுடன் கொத்தி இழுப்பானோ என்ற கற்பனையில் அவள் இரத்தம் சுண்டிப் போகிறது. பூட்டுத் திறக்கும் ஒசை கேட்கையில் அவள் ஆவியாகிப் போனாற்போல் நிற்கிறாள். ஒளி உள்ளே பாய்கிறது.

“வாட் நான்சென்ஸ்? யார் நீங்க?”

தன்னைக் கூர்ந்து நோக்கும் இளைஞன் அறிவு மலர்ச்சி எய்தியவன் என்றறியும்போது, அவள் தான் ஆவியாகிப் போயிருக்கவில்லையே என்று குன்றிப் போகிறாள்.

“நீங்க யாரு? இங்கே யார் கூட்டிவந்தது?"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/327&oldid=1101414" இலிருந்து மீள்விக்கப்பட்டது