பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/328

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

326

ரோஜா இதழ்கள்

“எக்ஸ்க்யூஸ்மி, நீங்க யார், இது யார் வீடு என்றெல்லாம் எனக்கு ஒன்றும் தெரியாது. பொதுக்கூட்ட மைதானத்தி லிருந்து இங்கு கடத்தி வரப்பட்டு சிறை வைக்கப்பட்டேன். ஒரு கிழவன் என்னை வண்டியில் கூட்டிவந்தான்...”

அவனுக்குப் புரிந்துகொள்ள சில விநாடிகளாகின்றன.

“ஓ..நீங்க...”

“நான் மைத்ரேயி. சுதந்திரக் கட்சிக் கூட்டத்தில் பேச இருந்தவள்.”

“நீங்கள்தான் அந்த மைத்ரேயியா?... அடாடா ? வாங்க, வாங்க, அட...பாவிப் பயல்களா? வேல்சாமிக் கிழவனா இத்தனைக்குத் துணிஞ்சான் ? எந்தக் காரில் கூட்டி வந்தாங்க?”

“பியட்போல இருந்தது. கருப்புக் கலர்.”

“அப்ப சரி. சர்வீசுக்குப் போயிருந்த வண்டியை எடுத் துட்டு வரேன்னு டிரைவர் போனான். இப்படிப் பண்ணிட்டாங்க. மை குட்னஸ். ரொம்ப மன்னிச்சுக்குங்க, உள்ளே வாங்க...”

அவன் வராந்தா வாயிற்படி ஏறி அவளை அழைக் கிறான். ஒளிவெள்ளத்தில், வைக்கோல் மாசும் கண்ணிர் கதையுமாக அவள் ஆண்டவனுக்கு நன்றி செலுத்துமுன் இந்த இளைஞனை நம்பலாமா என்ற ஐயம் தோன்ற அசையாமல் நிற்கிறாள்.

‘எக்ஸ்க்யூஸ்மி, நீங்க யாரோ என்னமோ எனக்குத் தெரியாது. எனக்கு இன்று நேர்ந்த அனுபவத்தை நினைச்சால் படி ஏறிவரும் துணிவு இல்லை. கதவைத் திறந்துவிட்டீர்கள், மிக்க நன்றி...” -

“அப்ப என்னை நம்பாமல் வெளியே நிற்கப் போகிறீர் களா? இல்லே இந்த நள்ளிரவில் வெளியே நடந்து போகப் போறீங்களா?” என்று அவன் நகைக்கிறான்.

பொறியில் சிக்கிய எலியாகத் தவிக்கிறாள். மறுமொழி வரவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/328&oldid=1100095" இலிருந்து மீள்விக்கப்பட்டது