பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/329

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராஜம் கிருஷ்ணன்

327

“உங்களுக்கு மேலும் ஒரு ஆபத்தும் வரக்கூடாது என்பதற்காகவே நான் படி ஏறி வரச் சொல்கிறேன். சத்தியமாகச் சொல்கிறேன். உள்ளே வாங்க...”

“வீட்டில் உங்கள் தாயார், சகோதரி அல்லது மனைவி யாரேனும் இருந்தால் வரச் சொல்லுங்கள். நான் வருகிறேன்...”

“என்ன துரதிர்ஷ்டம்! தாயார் இறந்து இரண்டு மாச மாகிறது. சகோதரி, மனைவி யாரும் எனக்கு இல்லை. நான் இந்தக் கட்சி அரசியல் எதிலும் சம்பந்தப்படாதவன். சொல்லப்போனால் ஆறேழு வருஷங்களாக இந்நாட்டிலேயே நான் இல்லை. தாயாருக்கு உடல் நலம் இல்லை என்று வந்தேன். அவர்கள் இறந்து போனார்கள். மீண்டும் இம்மாசம் பதினெட்டாம் தேதி நான் சிகாகோ போக இருக்கிறேன். போதுமா? கம் இன் ப்ளீஸ்...”

தனக்குள் நாணியவளாக அவள் படியேறிகூடத்துள் நுழைந்து அங்குள்ள பெஞ்சில் உட்காருகிறாள்.

“நீங்கள் இன்னும் பயத்தை விடவில்லையா? அதோ குளியலறை இருக்கிறது. முகத்தைக் கழுவிக் கொள்ளுங்கள்” என்று காட்டுகிறான். பிறகு உள்ளே செல்கிறான்.

அவள் குளியலறை வாஷ்பேஸினைத் திறந்து முகத்தைக் கழுவி கொள்கிறாள். சில்லென்று குளிர்ந்த நீர் பட்டதும் இதமாக இருக்கிறது. நினைவுகள் குழம்பினாலும் மேலோட்டமாக அமைதியை வரவழைத்துக் கொள்கிறாள். அவன் ஒரு தட்டில் வெண்ணை தடவிய ரொட்டித் துண்டுகளும் ஒரு தம்ளரில் பாலும் கொண்டு வருகிறான். -

“ஐயோ, இதெல்லாம் எதற்கு...இப்போது..?” என்று கூசிக் குன்றுகிறாள்.

“வேறு சாப்பாடு ஒன்றுமில்லை. நீங்கள் பசியோடிருப்பீர்கள். பார்த்தாலே தெரிகிறது...” என்று தட்டை வைத்துவிட்டுப் போய் இரண்டு மலை வாழைப் பழங்களைக் கொண்டு வருகிறான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/329&oldid=1100103" இலிருந்து மீள்விக்கப்பட்டது