பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/330

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

328

ரோஜா இதழ்கள்

“உங்களுக்கு எப்படி நன்றி சொல்வதென்று புரிய வில்லை. உங்களுடைய ஆட்கள் பத்திரமான இடம் என்று செய்ததை நீங்கள் முறியடித்துவிட்டு மனிதத் தன்மையைக் காட்டுகிறீர்கள். இந்தப் பெரிய வீட்டில் நீங்கள் மட்டுமே இருப்பதால்தான் அவர்கள் துணிவடைந்திருக்கின்றனர். இருந்தாலும் அந்தக் கிழவன் காங்கிரஸ் கட்சியில் இவ்வளவு விசுவாசம் வைத்திருப்பதை நான் பாராட்டுகிறேன்...’

“இந்த வீடு, ராஜா எம்.பி. தெரியுமா? அவருடையது. எனக்கு அவர் மாமா. கிழவன் வேல்சாமி இங்கேயே ரொம்ப நாளாக வீட்டையும் தோட்டத்தையும் பார்த்திட்டிருப்பவன், என் தகப்பனார் பாட்டனார் காலத்தவன். திருச்செங்கோட்டு ஆசிரமத்தோடு நெருங்கிய தொடர்புடைய பழைய காங்கிரஸ்காரர்கள் அவர்கள் எல்லாரும். என் தகப்பனார் நாற்பத்திரண்டு இயக்கத்தில் சிறைசென்று வெளி வந்தபின் நோய்கண்டு காலமானார். அந்தக் காலத்தில் எல்லாம் அவருடனே இருந்தவன் வேல்சாமி. அவனுக்கு இப்போது ஒரே ஆத்திரம். காங்கிரசை யாரேனும் மட்டமாகப் பேசினால் தாங்க மாட்டான். அவன் வேலைதான் இது... இந்திய கிராமவாசி. மிகவும் நல்லவன். படிப்பறிவில்லா விட்டாலும் பண்பு மிகுந்தவன். ஆனால் அவனுடைய நம்பிக்கைகளைத் திருப்புவது மிகக் கடினம். அவன் முரடனாகிவிடுவான். குருடனுக்குப் பாடம் சொல்லி வைப்பதுபோல் மிகவும் கவனமாக இவனிடம் இருக்க வேண்டும்...”

மைத்ரேயி கிழவனின் தன்மையை இப்போது புரிந்து கொள்ளுகிறாள். வேறு காலிகள் அவளைக் கடத்திச் செல்வதைத் தவிர்க்கவே அவன் இப்படிச் செய்ததாகச் சொன்னது நினைவுக்கு வருகிறது. ஆண்டவனே தன்னை இவ்விதம் கிழவன் உருவில் வந்து காப்பாற்றியதாக நினைக்கையில் கண்கள் கசிகின்றன.

“நான் ஒன்று கேட்கட்டுமா? நீங்கள் தப்பாக நினைத்துக் கொள்ளமாட்டீர்கள் என்று நினைக்கிறேன்...”

“கேளுங்கள்...”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/330&oldid=1100110" இலிருந்து மீள்விக்கப்பட்டது