பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/338

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

336

ரோஜா இதழ்கள்

ருக்கிறான். குடிசைகளிலெல்லாம் வேங்கடாசலபதி படத்தையும் பணத்தையும் கொண்டுபோய்ப் படத்தைக் காட்டி நட்சத்திரத்துக்கு வாக்களிக்க வேண்டுமாய்ச் சத்தியம் வாங்கிக் கொண்டு பணம் கொடுத்திருக்கிறான். மைத்ரேயி சிரித்துக் கொண்டே அவனிடம் கேட்டாள். “சத்தியம், தர்மம் என்று சொல்லிக்கொண்டு இப்படிச் செய்யலாமா?” என்று அவள் கேட்டதற்கு அவன், “இது நான் மட்டுமா செய்கிறேன்? காங்கிரஸ் வழி வைத்தது தான். ஆளும் கட்சி என்று தன் அதிகாரத்தை எவ்வளவு துஷ்பிரயோகம் செய்கிறார்கள்? முள்ளுக்கு முள். அவர்கள் செய்யும் குற்றங்கள் அனந்தம். இது தனிப்பட்டவனின் சிறு புள்ளி. பெரியவர் சொன்னாற்போல் ஆளுங்கட்சியினர் ஏன் முன்பே பதவி துறந்து மந்திரிசபையைக் கலைத்து கவர்னர் அதிகாரத்தின் கீழ் கொண்டுவரவில்லை?” என்று மடக்கினான்.

அவனையும் அவளையும் இணைத்து யாரோ எதிர்க் கட்சிக்காரன் ஒரு புற்றீசல் பத்திரிகைத்தாளில் அச்சிட்டு அந்தத் துணுக்கை வெட்டி அவள் பார்வைக்கும் அனுப்பி வைத்திருந்தான். அப்போது அதுவும்கூட வெறும் எறும்புக் கடியாகத்தானிருந்தது. உண்மையிலேயே மாசு ஒட்டமுடியாது என்று அவள் அவற்றை எல்லாம் பொருட்படுத்தவில்லை. இப்போது மாசு ஒட்டிக்கொள்ளாமல் மீள்வது அவ்வளவு எளிதான செயல் அல்ல என்பதைப் புரிந்துகொண்டு விட்டாள்.

நெஞ்சு ஊமைக்காயமாய் நோகிறது. ஞானம் முகத்தில் அறையவில்லை. உள்ளத்தைப் பின்னும் நோகச் செய்திருக்கிறாள்.

அவளுக்கு யார்...யார் இருக்கிறார்கள்?

கீழே விழுந்து மூக்கை உடைத்துக்கொண்ட குழந்தை அலறிக் கொண்டு தாயிடம்தானே செல்லும் ?

அவளுக்கு யார் தாய் ? அவள் உறங்கமாட்டாள் என்று அந்தத் தாய்க்குத் தெரியும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/338&oldid=1100172" இலிருந்து மீள்விக்கப்பட்டது