பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/342

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

340

ரோஜா இதழ்கள்

மணி ஆறு, ஏழு, எட்டும் அடித்த பின்னரே ஞானம் வீடு திரும்புகிறாள். காலனிக்கு வெளியே கடைவீதிக்கு சில நாட்களில் அவள் செல்வதுண்டு. வரும்போது பையில் ஏதேனும் பழங்களோ, சாமானோ வாங்கி வருவாள். இன்று வீட்டை விட்டுப் போகவேண்டும், அவளுடன் பேசுவதைத் தவிர்க்க வேண்டும் என்றே அவள் வெளியே சென்றிருப்பதாகத் தோன்றுகிறது.

“கோயிலுக்குப் போயிருந்தீர்களா, அக்கா ?”

ஞானம் கோயிலுக்கு என்று செல்வதில்லை என்பதை மைத்ரேயி அறிவாள்.

“தினமும் இப்படித்தான் மைதானத்தைத் தாண்டிக் கொஞ்சம் நடந்துட்டு வரேன்...”

பேச்சைத் துவங்கும்போதே மேலே பேச வேண்டாம் என்ற முற்றுப்புள்ளி வைத்தாற்போலிருக்கிறது.

மைத்ரேயிக்கு அன்றிரவு உணவு இறங்கவில்லை.

மறுநாள் காலையில் அவள் எழுந்து வழக்கம்போல் காபி போட்டு, சமையல் செய்கிறாள். ஞானம் தேவைக்கு மேல் பேசவில்லை. தனிமையில் சிறு குழந்தையைப் போல மைத்ரேயிக்கு அழுகையாக வருகிறது. இரண்டு நாட்களுக்கு மேல் இருவருக்கும் இடையே தொங்கும் திரையை அவளால் அறுத்தெறியாமல் இருக்க முடியவில்லை. அன்றிரவு ஞானம் படுக்கையில் படித்துக் கொண்டு விளக்கணைக்கவில்லை. மைத்ரேயி காலடியில் நிற்கிறாள்.

“என்ன சமாசாரம் ?”

கனிவும் கசிவும் எங்கே ஒளிந்து கொண்டிருக்கின்றன?

“நீங்கள் என்னை இப்படி நடத்தாதீர்கள் அக்கா...?”

சொல் முடியுமுன் பிரளயமாக அழுகை வருகிறது.

“எதுக்கு இப்ப அழறே நீ?”

அந்த அதட்டல் சாதாரணமாக இல்லை. மைத்ரேயி சட்டென்று கண்களைத் துடைத்துக் கொள்கிறாள்.

“நான்...நீங்க சொன்ன பேச்சுக்களை எல்லாம் லட்சியம் பண்ணாதது தப்பு. என்னை மன்னிச்சிடுங்கக்கா, முந்தா நா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/342&oldid=1100244" இலிருந்து மீள்விக்கப்பட்டது