பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/344

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

342

ரோஜா இதழ்கள்


இங்கே ஏன் வரணும்? நீ இப்போது கண்முழிக்கத் தெரியாத நாய்க்குட்டி இல்லை. நான் தெளிவாகச் சொல்கிறேன். இங்கே கண்ட கட்சி ஆட்களும் வருவதும் ஆபீசுக்கு டெலிஃபோன் செய்வதும் எனக்கு நல்லதல்ல. இனி நீ உன் அக்கா அத்திம்பேருடனேயே இருந்து கொள்ளலாம். நான் என்ன சொல்வேனோ என்று தயங்கவும் வேண்டாம். உன் மேல் உரிமை கொண்டாட எனக்கு ஏது உரிமை ?”

“அக்கா.அக்கா? நீங்க இப்படித் தள்ளிவிடுவேள்னு நான் நினைக்கலே அக்கா ?...”

நெஞ்சம் வெடிக்கத் துயரம் பீரிடுகிறது. அழுத்திக் கொள்கிறாள்.

“நான் தள்ளவில்லை. உனக்கு நான் ஒட்டாமலிருப்பது சங்கடமாக இருக்கும். மேலும் இரத்த பாசம் பெரிசு என்பதை நீயே நிரூபிச்சுட்டே. நீ அங்கேதானிருக்க வேணும்னு நான் அன்னிக்கே முடிவு பண்ணியாச்சு.”

“என் மனசை நீங்கள் புண்பண்ண வேண்டுமென்று நினைச்சா, நான் வேறு என்ன செய்யலாம்? நீங்கள் என் மீது உரிமை இல்லை என்று நினைச்சாலும் நான் இருப்பதாகத்தான் இன்னமும் நம்புகிறேன். வெறும் இரத்தம் உரிமை கொண்டாடுவதை நீங்கள் பெரிதாக மதிக்கலாம். ஆனால் அது உண்மையான கஷ்டம் வந்தபோது கைவிட்டு விட்டது. நீங்கள் எனக்கு வாழ்வு கொடுத்தீர்கள்; இன்று இப்படிப் பேச, உங்களை அன்று பெரிதாகக் கருதாமல் சீனிவாசனுடன் போக, எனக்கு வந்த துணிவும் தைரியமும் தன்னம்பிக்கையும் நீங்கள் கொடுத்தவை. நான் சாகும் வரையிலும் நெஞ்சில் இந்த ஆதாரத்தை நினைத்துக் கொண்டே இருப்பேன். உங்களுடைய மனசுக்குக் கஷ்டம் இருக்கலாம். நான் அதையும் ஏற்றுப் பொறுப்பேன். ஆனால் உங்களுக்கு என்னால் ஒரு சங்கடம் வருவதை நான் கொஞ்சமும் அநுமதிக்க மாட்டேன். நான் நாளையே இந்த இடத்தை விட்டுப் போய்விடுவேன்.”

அந்த அறையில் கடைசியாக வந்து படுப்பதாகத் தோன்றுகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/344&oldid=1100247" இலிருந்து மீள்விக்கப்பட்டது