பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/346

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

344

ரோஜா இதழ்கள்

வழக்கத்தில் இல்லாததொரு பரபரப்பு. பஸ் வருகிறது. அவள் தேனாம்பேட்டை மூலையில் வந்து இறங்கும் போது, வெறுங்கையுடன் போகக்கூடாது என்று தோன்றுகிறது. ஆனால் கடைகள் ஒன்றும் திறந்திருக்கவில்லை. மக்கள் வாக்குகளைப் பதிவுசெய்யச் சாரிசாரியாகப் போய்க்கொண்டிருக்கிறார்கள். பண்டிபஜார் மார்க்கெட் வரை வந்த அவள் திறந்திருந்த ஒருபழக்கடையில் கொள்ளை விலைகொடுத்து பத்து ஆரஞ்சுப் பழங்களை வாங்கிப் பையிலும் பெட்டியிலும் வைத்துக் கொள்கிறாள்.

இனி மதுரம் கூறிய முகவரிக்கு அவள் போகவேண்டும். அந்தப் பக்கம் செல்லக்கூடிய பஸ் இருக்கிறதா என்று தெரியவில்லை. இரண்டொரு ரிக்ஷாக்காரர்களை அணுகி, “பழைய மாம்பலத்தில் சுப்பராயன் தெரு எங்கிருக்கிறது தெரியுமா?” என்று கேட்கிறாள். அவர்கள் சவாரி அழைத்துச் செல்லவும் மறுக்கின்றனர். கையில் பெட்டியுடன் அவளே கேட்டுக் கேட்டு அலைந்தபின் சுமார் ஒன்பதரை மணிக்கு அந்தச் சந்தை அடைகிறாள். “ஒரு தாவாரத்திலே குடி இருக்கேன், எதிர்க்க தகரக் கடைக்காரன். மதுரம்மாமின்னு கேட்டா சொல்லுவா...”

அந்தத் தெருவில் கால் வைக்க முடியவில்லை. அந்தச் சந்து வீடுகளுக்கு தெருவைத் தவிர வேறு கழிவிடம் கிடையாது என்று புரிகிறது.

ஒரு டப்பாக் காரும் இரண்டு ரிக்ஷாக்களும் அங்கு மக்களைத் திரட்டிச் செல்ல வந்திருக்கின்றன. குஞ்சு குழந்தைகள் தங்களுக்கு வண்டி சவாரி இல்லையே என்று ஏக்கத்துடன் வேடிக்கை பார்க்கின்றனர். நாலைந்து தேர்தல் ஏஜென்டுகள் ஒவ்வொரு வீட்டிலும் புகுந்து அழைக்க வந்திருக்கின்றனர்.

அவளுக்குத் தகரக்கடை எது என்று புலப்படவில்லை. கையில் பெட்டியுடன் அங்கே நின்றால் யாரேனும் தன்னை அடையாளம் கண்டுகொள்வரோ என்றஞ்சி, வண்டிகள் ஏஜெண்டுகள் தன்னைக் கடந்துசெல்லும்வரையிலும் அவள் ஓர்புறம் ஒதுங்கி நிற்கிறாள். பிறகு, “உதயசூரியனுக்கு ஜே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/346&oldid=1101437" இலிருந்து மீள்விக்கப்பட்டது