பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/348

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

346

ரோஜா இதழ்கள்


“உம்பேரு? யாரோ எலக்ஷனுக்கு நிக்கறா லோகான்னு சொன்னாளே, அவளா?”

“இல்லே, எம்பேரு மைத்ரேயி, அந்த மாமி எனக்குச் சித்தி. இங்கேதானிருக்கிறாளா?”

மைத்ரேயியின் வரலாறு முழுவதையும் தெரிந்துகொண்டு தான் விடுவாள் போலிருக்கிறது.

“பின்னாடிப் போ. உடம்பு சரியில்லை போலிருக்கு. மூணு நாளாக் காணலே...’

மைத்ரேயி அந்தப் புகை படிந்த கரி இருட்டில் வழியைத் தடவிக் கொண்டு போகிறாள். ஒரு மூலையில் சாக்குப் படுதா தொங்குகிறது. அது அசைகிறது. கம்மிய குரல், “மைத்ரேயியா வா...” என்று அழைக்கிறது.

அவள் உள்ளே அடி வைக்கிறாள். மண் சுவர்களில் பூக்குவியல்களைப் போல் இருக்கும் ஓட்டுக்கூரை. வெளிச்சம் சந்து வழியே வருவதனால்தான் உள்ளே நன்றாகக் கண் தெரி கிறது. இரண்டு மண் அடுப்புகள்; சட்டிப் பானை, கரிபிடித்த தகரடப்பா, அலுமினியம் தூக்கு முதலிய சாமான்கள் அந்த எட்டுக்கு ஆறு காணாத பகுதியில் இடம் பெற்றிருக்கின்றன. ஒரு புறம் மதுரம் மாமி, ஒரு கந்தற்பாயிலும் அழுக்குத் தலையணையிலும் படுத்துக் கிடக்கிறாள். அருகில் செல்ல இயலாத படி ஒரு நாற்றம்.

“என்ன மாமி, உங்க உடம்புக்கு? அடடா? இப்படிப் படுத்துட்டேளே ?”

மைத்ரேயி பெட்டியை கீழே வைத்துவிட்டு அவள் கையைப் பற்றிக் கொள்கிறாள். மதுரத்துக்குப் பேச முடியாமல் நெஞ்சைடைக்கிறது. கண்ணீர் மல்குகிறது. “நான் எப்படியோ தள்ளிண்டிருந்தேன். இப்ப ஒரு மாசமா என்னால முடியவேயில்லே. நெஞ்சு, தொண்டை எல்லாம் ரணமாயிருக்கு. சாப்பாடு தள்ளி மூணு நாலு மாசம்கூட ஆயிடுத்து...”

‘அட பாவமே? அன்னிக்கு என்னைப் பார்த்தேளே, சொல்லலியே ?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/348&oldid=1100287" இலிருந்து மீள்விக்கப்பட்டது