பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/350

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

348

ரோஜா இதழ்கள்

கொடுக்கிறாள். இரண்டு சுளைகள் கூட விழுங்க இயலாத படி தலையை உருட்டுகிறாள்.

“வேண்டாண்டியம்மா, இந்த நோவோடு...முடியலே...”

“சாறு பிழிந்து கொடுக்கிறேன். ஒன்றுமே சாப்பிடாமல் எப்படி மாமி?” இன்னொரு பழத்தை நறுக்கி சாறு பிழிய அங்கே சுற்றுமுற்றும் பார்த்து ஒரு அலுமினியத் தம்ளரை எடுக்கிறாள். அரிவாள்மனையும் இருக்கிறது. தம்ளரைக் கழுவ நீரில்லை. பிறகு கொஞ்சம் சீனி போட வேண்டாமா? அவள் வெளியே நீர் தேடி வரும்போது மதுரம் ஓங்கரிப்பது போல் ஓசை கேட்கிறது. பார்த்த மைத்ரேயிக்கு நாவும் நெஞ்சும் ஒட்டிக் கொள்கின்றன. இரத்தம்; மதுரம் கையில் ஏந்திக்கொண்டு, அருகில் உள்ள சுருணையில் துடைத்துக் கொள்கிறாள். அது குடலைப் புரட்டும் நாற்றம் வீசுகிறது. இந்த நிலையில் மதுரத்தை உடனே ஏதேனும் மருத்துவ மனைக்குக் கொண்டு செல்ல வேண்டியதுதான் உசிதம். ஆண்டவன் தக்க தருணத்தில், தன்னை அங்கு கொண்டு வந்து சேர்த்ததற்காக மனமிரங்கி நன்றி செலுத்துகிறாள்.

“மாமி, நான் போய் ஒரு வண்டி கொண்டு வரேன். உங்களை யாரேனும் டாக்டரிடம் அழைத்துச் செல்கிறேன்.” என்று கூறி விட்டுக் கைப்பையை எடுத்துக் கொண்டு வெளியே வருகிறாள்.

டாக்ஸி...பழைய மாம்பலம் சந்தில் டாக்ஸி வருமா?

இரத்தம் கக்கினால், இவ்வளவு வாடை வருமா? முற்றியக்ஷயமாக இருக்குமோ? நோய்களைப் பற்றி மைத்ரேயிக்கு அதிகமாக ஒன்றும் தெரியாது. தலைவலி, தொண்டைப்புண், காய்ச்சல் என்றுதான் அவள் பார்த்திருக்கிறாள். எனினும் மதுரத்தின் நிலை, முற்றிய நோயின் அறிகுறியாகவே காட்டுவதாக உறுதி கொண்டு அவள் ஒரு வண்டிக்காகத் தேடுகிறாள். ரயில்வண்டி நிலையத்தினருகில் நிச்சயமாக வண்டி கிடைக்குமென்றெண்ணி விரைந்து வருகிறாள், அங்கு ஒரு டாக்ஸி கூட அன்று நிற்கவில்லை. ஒரு ரிக்ஷாக்காரனை பார்க்கிறாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/350&oldid=1101442" இலிருந்து மீள்விக்கப்பட்டது