பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/352

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

350

ரோஜா இதழ்கள்

“ஆமாம். உள்ளே வாடி, எவ்வளவு நாளாச்சு பார்த்து ? யாருக்கு உடம்பு சரியில்லே? உக்காருடி, நீ ஸ்கூலைவிட்டுப் போனப்புறம் என்னல்லாம் பேசிட்டாங்க...”

“நளினி, அதெல்லாம் அப்புறம் பேசிக்கலாம். எனக்கு ரொம்பவும் வேண்டிய அம்மா ரொம்ப நோவாப்படுத்திருக்கா, டாக்டரை அழைச்சிட்டுப் போகலான்னு வந்தேன். அவர் எப்ப வருவார்?...”

“எங்க மாமாதான் அவர். அவர் ஆஸ்பத்திரியிலிருந்து வர இரண்டு மணியாகும். அதுவும் இன்னிக்கு ஆபரேஷன் டே வேற....உக்காறேன், பறக்கிறியே ?...”

“உக்காரத்துக்கில்லே நளினி, அவங்க ரத்தமா வாந்தி யெடுத்திருக்கிறதால, இப்ப எப்படி இருக்காங்களோ, வேற. பக்கத்திலே நான் கூட்டிட்டுப் போகறாப்பல டாக்டர் இருக்காங்களா இங்கே...?”

“ஏன், நான் ஃபைனல் இயர் ஸ்டுடன்ட்தான். வந்து பார்க்கட்டுமா?” என்று நளினி சிரிக்கிறாள். அப்போதுதான் மைத்ரேயி அவள் வைத்துப் படித்துக்கொண்டிருந்த தடிப் புத்தகத்தைப் பார்க்கிறாள்.

‘ட்யூமர்ஸ்’ என்ற பக்கம் விரிந்திருக்கிறது.

“வரியா? பின்ன...எனக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. ரொம்ப ஹெல்ப்லஸா நிக்கிறேன்...”

மைத்ரேயியிடம் வரலாறு கேட்கும் ஆசையினால் உந்தப்பட்டு, நளினி அவளுடன் வரச் சம்மதிக்கிறாள்.

“எங்க மாமா இங்கே கிளினிக்குக்கு மட்டுமே இந்த வீடு வச்சிட்டிருக்கிறார். நான் இங்கே வந்து படிக்கலான்னு வந்து தங்குகிறது வழக்கம். எங்க வீடு டவுனில் இருக்கு. மாமா முதல்ல இந்த வீட்டில்இருந்தப்ப இங்கே பிராக்டீஸ் புடிச்சது. இப்ப அடையாறில் வீடு கட்டிட்டுப் போயிட்டார். ஆனாலும் இங்கே வந்து போவார். யாருக்குடீ உடம்பு சரியில்லே? பாடலரசு தனராஜ்தானேடி உன்...”

“அப்பவே டைவர்ஸ் வாங்கிட்டேன். நளினி, கொஞ்சம் சீக்கிரம் வரியா?...”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/352&oldid=1101446" இலிருந்து மீள்விக்கப்பட்டது