பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/353

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராஜம் கிருஷ்ணன்

351

"சரி நீ போய் ரிக்‌ஷா கொண்டுவா, இல்லாட்டி டாக்ஸி பிடிச்சிட்டுவா, நான் இத கிளம்பிடறேன்.”

மருத்துவக் கல்லூரி மாணவியே வெயிலில் நடந்து நோயாளியைப் பார்க்க வரமாட்டாள் என்பதை மைத்ரேயி அப்போதுதான் புரிந்துகொள்கிறாள். மீண்டும் ரயிலடிக்குச் சென்று நிற்கிறாள். டாக்ஸி ஒன்று இருக்கிறது. ஆனால் அந்த வண்டிக்குப் பழைய மாம்பலம் வாசனையே பிடிக்காதாம். மதுரம் இந்நேரம் என்ன நிலையிலிருப்பாளோ? கால்மணி நின்று, ஒரு ரிக்ஷாவைப் பிடித்துக் கொண்டு வருகிறாள். நளினி ஒரு சிறு கைப்பையுடன், (டாக்டர்களுக்குரியதுதான்) ஏறிக்கொள்கிறாள். எல்லம்மன் சந்து போகும்வரையிலும் அவளுக்கு மைத்ரேயி தன் கடந்த வரலாற்றை விளக்க வேண்டியிருக்கிறது. இருண்ட பகுதிகளை நீக்கிவிட்டு ஒளி மிகுந்த பகுதியை மட்டும் சொல்லிவைக்கிறாள். அந்த சந்திலுள்ள பொந்து வீட்டைப் பார்த்த்தும் நளினி புருவங்களை உயர்த்துகிறாள். ‘ஒ, மை காட்! இங்கேயா இருக்கு உன் பேஷண்டு?”

“ஆமாம் நளினி, மனிதர்கள் இப்படியும் இங்கெல்லாம் வாழ்கிறார்கள்...’ என்று வண்டியைவிட்டு இறங்குகிறாள் மைத்ரேயி.

ஐயங்கார்க் கிழவி மட்டும் இப்போதில்லை. ஓட்டுப் போட்டு விட்டுத் திரும்பிய நபர்கள் வீடு முழுவதும் கறையான் புற்றை நினைப்பூட்ட மொய்த்திருக்கின்றனர். “யார் நீங்க? யாரு யாரு?” என்று ஒருவருக்குமேல் ஒருவர் எம்பிக் கொண்டு விசாரிக்கின்றனர்.

உள்ளே வருவதற்கு நளினி மறுக்கிறாள் முதலில். “நீ கூப்பிட்டியேன்னு வந்துட்டேன். நான் ஸெர்வீஸ் பண்றதுக்காகப் படிக்கலே சைக்யாட்ரி மாதிரி எதானும் ஃபாரின்ல போய் ஸ்பெஷலைஸ் பண்ணிட்டு, நல்ல ஸிடியில் பாஷா ஒரு அபார்ட்மெண்டல போர்டு போட்டுட்டு உக்காந்திடுவேன் ஐ நோ, ஐ கேன் மின்ட் மணி (I know I can mint money) எனக்கு இந்தக் கேஸைப் பார்த்து என்ன பிரயோசனம் சொல்லு?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/353&oldid=1100784" இலிருந்து மீள்விக்கப்பட்டது