பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/360

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

358

ரோஜா இதழ்கள்

பையன்களும் எங்கிருந்தோ டப்பாவிலும் மண் பானையிலும் நீர் கொண்டு வருகிறார்கள். மதுரத்தின் முடியைப் பறித்த அதே தர்மம், இந்தப் பையன்களை அவர்கள் விரும்பாத, சமுதாயம் மதிக்காத கோலம் கொள்ளச் செய்கிறது.

அவள் பொறுப்புக்களின் தலைவாயிலில் வந்து நிற்கிறாள். மூச்சுவிட முடியாத சுமையாக இருக்கலாம். ஆனால், இதில் அவள் தன்னை மறக்கமுடியும் என்று புரிந்து கொண்டிருக்கிறாள். வறுமையுடன் போராடி, வாழ்க்கைத் தேவைகளைப் பெற்றுப் பிறருக்கு உதவும் வாழ்வில் நிறைவும் அமைதியும் இருக்கின்றன.

ஆண்டவனே, வறுமையை அணிகலனாகப் பூண்டு வாழ்க்கைத் தேவைகளுக்கு உழைக்கும் பாங்கையும் பிறருக்காக வாழும் உன்னத சிந்தையையும் தா! பலவீனங்களுக்கு இடம் கொடுத்தபின் “மனிதன் அற்பமானவன், என்னை மன்னித்து விடுங்கள் எந்தையே!” என்று இறைஞ்ச வேண்டாத உறுதியை எனக்குத் தா!

கூடத்தில் குழந்தை துணியை நனைத்துவிட்டுக் கால்களை உதைத்துக்கொண்டு அழுகிறது.

மைத்ரேயி அருகில் சென்று குனியும்போது அழுகை நிற்கிறது. கையிலேந்தியதும் கண்ணிரிடையே அந்த ரோஜா இதழ்களில் சிரிப்பு மலருகிறது.

• முற்றும் •
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/360&oldid=1100802" இலிருந்து மீள்விக்கப்பட்டது