பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/84

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

82

ரோஜா இதழ்கள்

என்று கூறிக் கொண்டு எல்லோர் இலையிலும் இரண்டு சொட்டுக்கள் எண்ணெய் தெளிக்கிறாள். மைத்ரேயியின் கலத்துக்கு முன் வரும்போது அவள் முகத்தில் ஓர் நாணப் புன்னகை விளங்குகிறது. “உனக்கு நெய் சாப்பிட்டுப் பழக்கமாயிருக்கும், பாவம்...விடட்டுமா?” என்று கேட்கையில் மைத்ரேயிக்கு என்ன மறுமொழி சொல்வதென்று புரியவில்லை.

இதற்குள் வாயிற்கதவு இடிபடுகிறது.

“இந்தச் சோறு தின்னும் நேரத்தில்தான் இந்த வீட்டுக்கு யாரேனும் வருவா...” என்று முணுமுணுத்துக் கொண்டே போகிறாள். சொர்ணம் ஆவலே உருவாக, “யாரு? தபாற்காரரா அக்கா?” என்று கத்துகிறாள். பிறகு கையை நக்கிக் கொண்டே வாயிற்படிவரை செல்கிறாள்.

மதுரம் திரும்பி வருகையில், “என்னக்கா? ஏதானும் கிடைச்சுதா?” என்று சொர்ணம் கேட்கையில், மைத்ரேயிக்கு அவள் எங்கிருந்தோ தபாலில் ஏதோ நன்மையை எதிர் பார்த்திருப்பதாகத்தான் தோன்றுகிறது. “ஒண்ணுமில்ல, இன்னிக்கு நம்பரைச் சொல்லுன்னான். எழுதிக்க... ஏண்டா, ஜிட்டு? சாப்பிட்டாச்சுன்னா எழுந்து போறதுதானே? எதுக்கு தட்டைப் போட்டு நக்கிண்டிருக்கே? இனிமே அப்பாக்கு அண்ணாக்கு தானிருக்கு, எழுந்திரு!”

அவன்மட்டுமில்லை. பொம்மியும் எழுந்திருக்கவில்லை. எல்லாருடைய கண்களும் அலுமினியக் குவளையில் நிலைக்கின்றன.

பொம்மி நாவால் கேட்கத் துணிவின்றிக் கையைக் காட்டுகிறாள். “இது ஒண்ணும் உனக்கில்ல. எழுந்துபோ, சொல்றேன்!”

மைத்ரேயியின் மென்மையான உணர்வுகளை யாரோ அழுத்திக் கூழாக்குவதுபோல் தோன்றுகிறது.

“எனக்கு மட்டுமா மோர்வாங்கி வச்சிருக்கேள், மாமி? எனக்கு மட்டுமா? எனக்கு மோர் பிடிக்காதே?-”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/84&oldid=1101921" இலிருந்து மீள்விக்கப்பட்டது