பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/85

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

83

அன்று அம்மணி அம்மாவிடம் மோர் கேட்டுச் சாப்பிட்ட நினைவும் வர, இந்தப் பொய்யைப் புகல்பவளுக்குக் கண்கள் சுரக்கின்றன. மதுரம் வாளியிலிருந்து ஒருவட்டை நீரை முகர்ந்து ஊற்றி, உப்பையும் அள்ளிப் போட்டு, அந்தச் சம்பாரத்தை எல்லோருக்கும் இன்னொரு காண்டி சோறுபோட்டு வார்க்கிறாள்.

மைத்ரேயிக்கு வறுமையில் இவ்வளவு புனிதமும் நெகிழ்ச்சியும் குலவும் என்று அன்றுவரை தெரிந்திருக்கவில்லை.

வயிறு நிரம்பியதும் குழந்தைகள் பூவரசமரத்தடியில் விளையாடப் போகிறார்கள். மதுரம் எங்கோ வெளியே செல்கிறாள். சொர்ணம் கலங்களைத் தேய்த்துக் கழுவிவிட்டு, சினிமாப் பாட்டுப் புத்தகமொன்றைக் கையில் வைத்துக் கொண்டு, வாயிற்படியில் தலைவைத்துப் படுக்கிறாள்.

மைத்ரேயிக்கு இது புதிய சிறையாக இருக்கிறது. ஒரு நாளை ஓட்டுவதற்கு முக்கி முனகும் பொருளாதார நெருக்கமடைய இந்தக் குடும்பத்தில் அவள் எப்படி ஒட்டிக் கொள்வாள்?

கையில் இருக்கும் சில்லறையுடன் இப்படியே பஸ்ஸில் ஏறலாம். ஏறி எங்கே செல்லலாம்? அவளைப் போன்ற ஒரு இளம் பெண், முள்ளில் சிக்கி ஒரு முறை குத்திக் கிழித்துக் கொண்ட காயத்தோடு எங்கே, எப்படிச் செல்வாள்?

மாமா, அன்று லோகநாயகி சோஷியல் வொர்க்கர் என்று சொன்னது மனசில் நிழலாடிக்கொண்டே இருக்கிறது. அத்திம்பேர் அக்காவுடன் முன்பொருமுறை எப்போதோ சென்னைக் கடற்கரைக்குச் சென்றபோது, அங்கே கைம்பெண்கள் விடுதி ஒன்று இருப்பதாகச் சொன்ன நினைவு குப்பத்தில் ‘லோக நாயகி அவர்கள் இந்தி வகுப்புகளைத் துவங்கி வைப்பார்கள்” என்று கொட்டை எழுத்துச் சுவரொட்டி பார்த்திருக்கிறாள். சென்னை செல்லும் பஸ்ஸில் ஏறிச் சென்று, தபால் நிலையம் ஏதேனும் ஒன்றில் ‘லோக நாயகி சோஷியல் வொர்க்கர்’ வீடு எது என்று கேட்டால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/85&oldid=1101925" இலிருந்து மீள்விக்கப்பட்டது