பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/96

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

94

ரோஜா இதழ்கள்

“உனக்குத்தாம்மா ஃபோன்!”

“பாலா, சௌக்யமா! டாக்டருக்கா படிக்கிறே?” என்று கேட்கிறாள். மதுரம்.

அவள் படிப்பைப் பற்றிய மதுரத்தின் அக்கறையைவிட அந்தப் பொழுதில் கேட்கும் கேள்வியின் முக்கியத்துவம்தான் பெரிதென்று மைத்ரேயி உணர்ந்து கொள்கிறாள்.

“இந்த மாமி எப்ப வந்தாலும் நான் டாக்டருக்குப் படிக்கிறேனான்னு கேட்கிறாள். எனக்கு டாக்டர்னாலேயே வெறுப்புன்னு, நானும் எத்தனை தடவையோ சொல்லிட்டேன் நினைப்பில்லையா மாமி?”

மதுரம் சிரிக்கிறாள். “நினைப்பே இருக்கறதில்லேடி பாலா. நீ அப்ப எம்.எஸ்.ஸியோ பி.யூ.ஸியோன்னா படிக்கிறேன்னே? ஜடம் ஏது நினைப்பு?” பாலா இன்னும் பெரிதாகச் சிரிக்கிறாள்.

“நான் இரண்டும் படிக்கலே. காலேஜில்தான் படிக்கிறேன்” என்று நகைச்சுவையுடன் பேசுவதுபோல் சிரித்துக் கொள்கிறாள் பாலா.

“கையிலேன்னா காயம்?”

“பிரஷர் குக்கர், புதுசா வாங்கிண்டு வந்து பூசை பண்றாளேன்னு சமைச்சேன். வெயிட்டைத் திறக்காமல் மூடியைத் திறந்தேன். அடிச்சுது ஆவி.... நல்லவேளையாக முகம் தப்பிச்சது”

“அடாடா...பார்த்துச் செய்யக் கூடாதா?”

லோகநாயகி பரபரப்பாக வருகிறாள், “மன்னி, அடுப்பை கொஞ்சம் கவனிச்சுக்கோ. நான் இப்ப அவசரமா வெளியில் போக வேண்டியிருக்கு. சேதுவுக்கு சாம்பார் ரசம் வேண்டாம். எதானும் பொரிச்ச குழம்பு பண்ணிச் சாதம் போடு. இந்தப் பொண்ணு இங்கேயே இருக்கட்டும்!” என்று சொல்லிவிட்டுப் போகிறாள்.

மதுரம் மிகவும் உரிமையுடன் உள்ளே செல்கிறாள்.

குளியலறையில் சென்று குளித்துவிட்டுப் பாலாவிடம் கேட்டு ஒரு ஆறு கஜம் சேலையை வாங்கிச் சுற்றிக் கொண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/96&oldid=1101949" இலிருந்து மீள்விக்கப்பட்டது