பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/98

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

96

ரோஜா இதழ்கள்

“நீ என்ன துளியுண்டு சாதம் போட்டுண்டிருக்கே? சாம்பார் சரியாயிருக்கோ ? ஒரே அவசரம்....”

“ஃபர்ஸ்ட் கிளாஸ் மாமி. நல்ல சாப்பாட்டுக்கு நாக்குச் செத்துப் போச்சு. உண்மையாச் சொல்றேனே! அம்மாக்கு சாம்பார் வைக்கவே தெரியலே. புளிப்பு காரம் எல்லாம் ஒண்ணாவே சேராம தனித்தனியாகத் தூக்கிண்டிருக்கும்.”

இந்தப் பெண் உள்ளே ஒன்றும் வைக்கத் தெரியாதவள் என்று மைத்ரேயி அறிந்து கொள்கிறாள்.

பாலா சாப்பிட்டு முடிக்குமுன் கலகலவென்று நாலைந்து பெண்கள் உள்ளே வருவது தெரிகிறது. லோகாவும் வருகிறாள்.

“சமையலாயிடுத்தா மன்னி? நாங்க சாப்பிட உட்காரலாமா?”

‘ஓ! பேஷா!’ என்று சிரிக்கும் மதுரம் உள்ளே வரும் பெண்களைப் பார்த்துக் கும்பிடு போடுகிறாள்.

அவர்கள் எல்லோரும் பெரிய இடத்துப் பெண்கள். பெரிய பெரிய தொழில் அதிபர் குடும்பப் பெண்கள்; அதிகாரிகளின் மனைவியர்; அமைச்சருக்கு மருமகள்.... மெல்லிய துகிலணிந்து புஸுபுஸுவென்று ரொட்டிமா போன்ற உடலுடன் விளங்கும் வனிதை வடநாட்டுக்காரி என்று விளங்குகிறது. இன்னொருத்தி நீளத்திலகம் இட்டுக் கொண்டு, வெட்டிக் கொண்ட முடியும் கையில்லா இரவிக் கையுமாக இருக்கிறாள். முடியை உயர்த்தி உச்சியில் கொண்டை போட்டுக் கொண்டு பருமனாக ஒரு அம்மாள்; மைத்ரேயிதான் மேசையில் தட்டு வைக்கிறாள்.

“இவள்தான் புதுசு..” என்று லோகநாயகி அந்த வட நாட்டு வனிதைக்குச் சொல்கிறாள் ஆங்கிலத்தில்.

“இங்கே வா, உன் பேரென்ன?” என்று கேட்கிறாள் லோகா.

“மைத்ரேயி” என்று சொல்லிக் கொண்டு நிற்கிறாள்.

“பிராமணப் பெண் போலிருக்கு, ஐயங்காரா?” என்று கேட்கிறாள் நாமத் திலகக்காரி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/98&oldid=1101952" இலிருந்து மீள்விக்கப்பட்டது