இருங்கோவேள், மாளிகைக்குள்ளே சென்று ஆடை மாற்றிக் கொண்டு, மரமாளிகையின் முகப்புக்கு வந்தான். அவன் வருகையை அறிவிக்கக் கொம்பு வாத்தியம் முழங்கிற்று. எல்லா வீரர்களும் ஓடிவந்து அணிவகுத்து நின்றார்கள். அவர்களைக் கம்பீரமாகப் பார்த்து அவர்கள் அளித்த மரியாதை வணக்கத்திற்குப் பதில் தெரிவிக்கும் வகையில் தலையை அசைத்தான் வேளிர்குடி வேந்தன்.
"ம்! அழைத்து வாருங்கள் சிறைப்பட்டவர்களை?" என்று உத்தரவிட்டான் ஒரு சேனாதிபதி.
நாலைந்து வீரர்கள் ஓடினார்கள்.
பயங்கரமாக ஒரு மணி ஒலித்தது.
நூறு வீரர்கள் கொழுந்து விட்டெரியும் தீவட்டிகளைக் கையிலேந்தி வந்தார்கள். அந்தத் தீவட்டிகள் அங்கே பூமியில் செருகப்பட்டன. தூரத்திலேகூட நிற்க முடியாத அளவுக்குத் தீவட்டிகளின் ஜுவாலை வீசிக் கொண்டிருந்தது. சிறைப்பட்டவர்கள் பலர், கையில் விலங்கு மாட்டப்பட்டு இழுத்து வரப்பட்டார்கள்.
அவர்களில் செழியனும் ஒருவன். சோர்ந்து போய் நடக்க முடியாமல் நடந்து வந்தான். ஆனால் அந்த நடையிலும் வீரம் கொடி கட்டிப் பறந்து கொண்டிருந்தது.
பூமியில் செருகப்பட்டிருந்த தீவட்டிகளுக்கு நடுவே சிறைப்பட்டவர்கள் நிறுத்தப்பட்டார்கள். தீ நாக்குகளைப் பல முனைகளிலும் சுழற்றிச் சுழற்றி எரிகின்ற அந்தப் பந்தங்கள் உமிழும் அனலை எப்படித்தான் அவ்வளவு அண்மையில் இருந்து தாங்கிக் கொள்ள முடியும்?
சிறைப்பட்டவர்கள் அனைவரும் சோழநாட்டுக்காரர்கள் என்பதைச் செழியன் புரிந்து கொண்டான். இத்தனை பேர் சோழ மண்டலத்திலே யிருந்து தூக்கி வரப்பட்டும் தன்னுடைய நாட்டுக்கு வர இருக்கும் ஆபத்தை உணராமல் இருக்கிறானே சோழன் என்று கோபங் கூட வந்தது செழியனுக்கு.