பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

106

கலைஞர் மு. கருணாநிதி


அந்தக் கோரக் காட்சியைப் பார்த்தவாறு செழியன் எரிமலைபோல குமுறிக் கொண்டு நின்றான். ஆடவில்லை. அசையவில்லை, அவன். அக்கினி அவனுடலைத் தீய்த்தபோதிலும் வீரத்திரு நோக்குடன் அவன் நின்று கொண்டிருந்தான். மர மாளிகைக்குள்ளேயிருந்து அரசி பெருந்தேவியும் தாமரையும் மற்றவர்களும் அந்தக் கொடுமையான தண்டனைக் காட்சியைப் பலகணிகளின் வழியே பார்த்துக் கொண்டிருந்தார்கள். அப்போது உள்ளே மன்னன் இருங்கோவேள் நுழைந்தான். அரசி படுக்கையிலிருந்தவாறு கை நீட்டி மன்னனை அருகழைத்து மரியாதை செய்வித்தாள்.

"என்னம்மா தாமரை! என்ன மிகுந்த சோகத்தோடு பார்த்துக் கொண்டிருக்கிறாய்?" என வினவினான், தங்கையைப் பார்த்து இருங்கோவேள்.

"எல்லாம் சரிதான் அண்ணா! ஆனாலும் சோழ நாட்டுக் கைதிகளை இவ்வளவு கொடுமையாகத் தண்டிப்பது மனிதாபிமானத்தை மீறிய செயலாக எனக்குத் தோன்றுகிறது!" என்றாள், கொஞ்சம் துணிவை வரவழைத்துக் கொண்டு தாமரை

"பைத்தியக்காரப் பெண்ணே! அந்தப் பாவிகளிடம் இரக்கம் வேறா உனக்கும்? நாடிழந்தோம், நலமிழந்தோம். நாடோடிகளைப் போல நடுக்காட்டில் மிருக வாழ்க்கை நடத்துகிறோம். இந்தநிலைக்கு நம்மை ஆளாக்கி விட்டவர்களை என்ன பாடுபடுத்தினாலும் தகும்!" என வெறி கொண்டவனைப் போலக் கத்தினான் இருங்கோவேள்.

தாமரை, அதற்குமேல் எதிர்த்துப்பேச விரும்பவில்லை. பலகணிப் பக்கம் போய்விட்டாள். அதன் வழியாக அந்தக் கைதிகளைப் பார்த்திடத் தொடங்கினாள். ஒவ்வொருவராகக் கீழே விழுந்து கொண்டிருந்தனர். அவளுக்குக் கண் கலங்கியது. அந்தக் காட்சியில் அப்படியே மெய்மறந்து நின்று கொண்டிருந்தாள்.

இருங்கோவேளிடம் அரசி மெதுவாகப் பேச ஆரம்பித்தாள், இடை இடையே இருமிக்கொண்டே.

"உங்கள் தங்கை காட்டோரத்தில் ஓர் ஊமை வாலிபனைப் பார்த்தாளாம்..."

"அப்படியா?.... ம்... அதற்கென்ன?"

"அந்த வாலிபன், கரிகாலனை பழி தீர்த்துக் கொள்வதற்காக அலைகிறானாம்..."

இருங்கோவேளின் உள்ளத்தில் முதல் ஐய வினா உருவாயிற்று.