ரோமாபுரிப் பாண்டியன்
107
"ஊமை வாலிபன்!"
"கரிகாலனைப் பழிவாங்க அலைகிறான்!"
மாறி மாறி ஒலித்தன அரசியின் வார்த்தைகள்.
"பிறகு!"
-என்று ஆவலுடன் பதில் தேடினான் மன்னன்.
"உங்கள் தங்கைக்கு அவன் மீது ஏதாவது அன்பு பிறந்து விட்டதோ என்னவோ? அதுவும் எத்தகைய அன்போ எனக்குத் தெரியவில்லை. அந்த வாலிபனுக்கு நல்ல மருத்துவ முறைகள் தெரியுமாம். அவனை அழைத்து வந்தால் எனக்கு மருத்துவமும் செய்வான்; உங்களுக்கு கரிகாலனைப் பழி தீர்க்கும் விஷயத்தில் உதவியாகவும் இருப்பான் என்று, தாமரை என்னிடம் கூறினாள். நான் அதெல்லாம் வேண்டாமென்று மறுத்து விட்டேன்."
"ஏன் மறுத்தாய்?... அந்த வாலிபன் பெயர் என்னவாம்?"
"முத்து என்று சொன்னாள்!"
"முத்து!" இருங்கோவேளின் உதடுகள் அசைந்தன.
"பெருந்தேவி! நல்ல மருத்துவன் என்றால் அழைத்து வரத் தடையேன் கூறினாய்?" என்று சொல்லிவிட்டுத் தங்கையைக் கூப்பிட்டு "தாமரை! தாமரை! இங்கே வாயேன்! பெருந்தேவியிடம் என்னவோ சொன்னாயாமே. நல்ல மருத்துவன் என்றால் அந்த ஊமை வாலிபனை அழைத்து வாயேன் - நல்லவன் தானே அவன்?" என்று பரபரப்புடன் கேட்டான் இருங்கோவேள்.
"ஆமண்ணா! நல்லவனாகத்தான் தெரிகிறது. அவனுக்குத் தெரியாத மூலிகைகளே இல்லையாம். நம்மைப் போல அவனும் சோழனுக்கு எதிரிதான்!"
என்றாள் தாமரை மகிழ்ச்சியுடன்!
"மிகவும் இளம் வாலிபனா?"
"வாலிபன் தான்!"
"மீசை முளைத்த வாலிபனா?"
"முளைத்ததோ என்னவோ தெரியாது: மீசையில்லை முகத்தில்!"
"பெயர்?"
"முத்து!"