பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

108

கலைஞர் மு. கருணாநிதி


"சிவப்பு நிறமா?... கறுப்பு நிறமா?"

"சிவப்புதான்! என்ன அண்ணா இப்படி கேள்வி போடுகிறாய்? உனக்கு முன்னமே தெரியுமா அந்த வாலிபனை?"

"ஊஹூம்- தெரியாது! தெரியாது! சந்தேகத்திற்குக் கேட்டேன். நீ அவனை அழைத்து வந்து, அரசிக்கு மருத்துவத்தைத் தொடங்கு. அதோடு ஒன்று- எதற்கும் நாம் ஜாக்கிரதையாக இருப்போம். தப்பித்தவறி நான் இங்கேயிருப்பது அந்த ஊமை வாலிபனுக்குத் தெரிய வேண்டாம். இருங்கோவேள் மன்னன் எங்கேயோ ஓடி விட்டதாக அவனிடம் சொல்லி வையுங்கள். நான் இங்கு வருவதாக இருந்தால் முகத்தை மாற்றிக் கொண்டு தான் வருவேன், உங்களைப் பார்க்க!"

"முகத்தை மாற்றிக் கொண்டென்றால், வேறு யாருடைய முகத்தையாவது வாங்கி வைத்துக் கொண்டா?"- எனச் சிரித்துக் கேட்டவாறு இரும ஆரம்பித்தாள் அரசி.

அவளைத் தழுவியவாறு மன்னன் புன்னகை புரிந்தான். அதைப் பார்க்க வெட்கிப் பலகணி வழியே வெளியே பார்க்கலானாள் தாமரை. பாதிக் கைதிகளுக்கு மேல் மூர்ச்சித்துக் கீழே விழுந்து விட்டார்கள். மற்றவர்கள் துடித்துக் கொண்டு நின்றார்கள். செழியன் மட்டுமே ஆடாது அசையாது நின்ற காட்சி தாமரையின் கவனத்தைக் கவர்ந்தது.

"எவ்வளவு நெஞ்சுறுதி அந்த வாலிபனுக்கு ! தன்னைச் சுற்றிலும் சுழன்று தீ நாக்குகள் ஜுவாலையை உமிழ்ந்து கொண்டிருக்கின்றன என்ற நிலையிலும் அவன் கண்களில் அச்சத்தின் சாயல் அணுவளவும் இல்லையே; கல்தூணைப் போல் அவன் நிற்கும் கம்பீரமே கம்பீரம்! இப்படிப்பட்ட வீரர்கள் நிரம்பிய நாட்டை யார்தான் வெற்றிகொள்ள முடியும்? விழிகளிலே ஊசிகளைச் செருகினாலும் வீரத்தை விலை கூறிடமாட்டார்கள் உண்மைத் தமிழர்கள். என்பதைப் புரிந்திருந்தும் ஏனோ என் அண்ணன் இந்தக் கொடுமையான தண்டனைகளை வழங்குகிறாரோ தெரியவில்லை."

-எனத் தனக்குள்ளாக நினைத்துக் கவலைப்பட்டாள் தாமரை. அவள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அநேகமாக எல்லாக் கைதிகளும் மயக்கமுற்றுக் கீழே விழுந்து விட்டனர். செழியன் மட்டுமே நின்று கொண்டிருந்தான். நின்ற நிலையிலேயே அவனுக்கும் தலை சுற்ற ஆரம்பித்தது. அவனையறியாமல் கண்கள் மூடி மூடித் திறந்தன. வெகு விரைவில் அவனும் சாய்ந்து விடுவான் என்று தாமரை எதிர்பார்த்தாள். அவளையுமறியாத ஒரு பரபரப்பு இருதயத்தைப் படபடவென்று துடிக்கச் செய்தது. சொல்லவொண்ணா ஆவலுடன் அவனையே நோக்கியவாறு நின்றாள்.