ரோமாபுரிப் பாண்டியன்
109
அவனுக்கு நேரே இருங்கோவேள் சென்று அவனையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான். அந்த வீர வாலிபனின் முகத்தில் எழுதப் பட்டது போல் ஒளி விட்டுக் கொண்டிருந்த உறுதி, இருங்கோவேளின் உள்ளத்தைத் தொட்டது. அருகே நின்ற வீரர்களைப் பார்த்து தீப்பந்தங்களை அணைக்குமாறு உத்தரவிட்டான். எல்லாத் தீப்பந்தங்களும் சில விநாடிகளில் அணைக்கப்பட்டன. கீழே விழுவதற்கு இருந்த செழியன் தன்னைச் சரிப்படுத்திக் கொண்டு விழிகளை அகலத் திறந்து எதிரே பார்த்தான். இருங்கோவேள் புன்னகை புரிந்தவாறு காட்சி தந்தான். செழியன் சுற்றுப்புறங்களைப் பார்த்தான். சோழ மண்டலக் கைதிகள் மூர்ச்சித்துக் கிடந்த கொடுமை ஆவேசமுறச் செய்தது.
"நீயும் ஒரு வீரனா?" எனக் கத்தினான் இருங்கோவேளைப் பார்த்து.
"ஏன்? உனக்குச் சந்தேகமாயிருக்கிறதா?" - இருங்கோவேள் அமைதியாகக் கேட்டான்.
"நெஞ்சிலே ஈரம் இல்லாதவனுக்கு வீரன் என்று பெயரில்லை முரடன் என்று பெயர்; காட்டுமிராண்டி என்று பெயர். இதைவிட மோசமான பெயர்களும் உண்டு. ஆனால் அழகு தமிழ் அகராதியில் அந்தப் பெயர்களுக்கு இடமில்லை!"
"எனக்கு நெஞ்சிலே ஈரமில்லையென்று நீ எப்படிக் கண்டுபிடித்தாய்?"
"இதோ - இந்த அணைந்த தீவட்டிகளைக் கேள்! அவை சொல்லும் பதில்!"
"வாலிபனே! அணைந்தது தீவட்டியல்ல!.. என் நாட்டின் வாழ்வு அணைந்தது! வேளிர்குடியின் குன்றாத பெரும் புகழ் அணைந்தது! யாரால்? யாரால் தம்பி இந்த அலங்கோலம்? நீ காப்பாற்ற நினைத்தாயே, அந்தக் கொடுங்கோல் மன்னன் கரிகால் பெருவளத்தானால்!"
"ஆ! கரிகாலர், கொடுங்கோலரா? அவரது ஆட்சித் திறம் கண்டு வாழ்த்துப் பாடுகிறாள் காவேரி அன்னை! அவர் கருணை உள்ளம் கண்டு, பூம்புகாரே புகழ் வீணை மீட்டுகிறது! 'தென்னகத்துப் பெருவேந்தன் திருமாவளவன் கரிகாலனே' என்று திரைகடலுக்கு அப்பால் உள்ள நாடுகள் எல்லாம் பாராட்டுகின்றன. நீ சொல்லுகிறாய்; அவர் கொடுங் கோலர் என்று! இப்போது தான் முதன் முறையாகக் கேள்விப்படுகிறேன். வெள்ளையைக் கறுப்பு என்று விளக்கம் தரும் ஒரு விசித்திரத்தை!"
"எனது திருநாட்டை அபகரித்துக் கொண்டவன் கொடுங்கோலன் அல்லாமல் வேறு யார்?"
"போரில் தோற்ற பொருள்தானே உன் நாடு!"