110
கலைஞர் மு. கருணாநிதி
"இளைஞனே! உன்னிடம் எனக்கென்ன பேச்சு? என்னையும் என் நாட்டு மக்களையும் அடிமைப்படுத்தி விட்டதாகக் கருதியிருக்கும் அந்தச் சோழனையும், அவனுக்குத் துணை நிற்கும் அந்தப் பாண்டியனையும் பழி வாங்காமல் ஓயப் போவதில்லை நான்!"
"எக்கேடாவது கெட்டுப் போ! எனக்கு நீ வழங்கியிருக்கும் தீர்ப்பு என்ன? அதைச் சீக்கிரம் கூறிவிடு!"
இந்த வார்த்தைகளைக் கேட்டதும் அதுவரை பொறுமையாயிருந்த இருங்கோவேளுக்குத் திடீரென ஆத்திரம் குமுறியது. அவனிடம் பேச்சுக் கொடுப்பதால் ஏதாவது பயன் ஏற்படும் எனக் கருதிய இருங்கோவேளுக்கு ஏமாற்றம் விளைந்தது மட்டுமல்ல, செழியனின் பதில்களால் அவன் எரிமலையாகவும் ஆகிவிட்டான். பற்களை நறநறவென்று கடித்தான்.
"தீர்ப்பா? திமிர் பிடித்தவனே! தீர்ப்பா? உன்னைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கொல்லுவதற்குத் திட்டம் போட்டிருக்கிறேன்! உன் விழிகளை எடுத்து என் கையிலே வைத்துக் கொண்டு உன் அங்கங்களைச் சிறிது சிறிதாக - செதில் செதிலாக கிழிக்கும் காட்சியை அந்த விழிகளுக்குக் காட்டி மகிழ்வேன்! போதுமா தீர்ப்பு? இன்னும் ஏதாவது புது முறை வேண்டுமா?"
இருங்கோவள் சீறினான் புலிபோல்! செழியன் கலகலவென நகைக்கத் தொடங்கினான்.
"வேளிர்குடியின் மன்னன் மகாவீரன் என்கின்ற என் நினைப்பைத்தான் சிறிது சிறிதாகச் சித்ரவதை செய்கிறாய்!" என்று நகைத்துக் கொண்டே கேலி பேசினான்.
அவன் சிரிப்பு அடங்குமென்று இருங்கோவேள் எதிர்பார்த்தான். செழியனோ இருங்கோவேளைப் பார்த்துப் பார்த்துச் சிரித்துக் கொண்டே இருந்தான். அப்படி அவன் சிரிப்பதைப் பெரும் அவமானமாகக் கருதிய இருங்கோவேள் வேகமாகப் பாய்ந்து செழியனின் கன்னத்தில் 'பளார் பளார்' என்று அறைந்திடத் தொடங்கினான். செழியன் அறைகளை வாங்கிக்கொண்டு அப்படியே நின்றான். அவனால் எதிர்க்க முடியாதபடி கைகள் விலங்கிடப் பட்டிருந்தன. கால்களிலும் இரும்புச் சங்கிலி! கைகள் வலியெடுக்கும் மட்டும் இருங்கோவேள் செழியனின் கன்னங்களில் மாறி மாறி அடித்துக் கொண்டேயிருந்தான். பிறகு அவனாகவே நிறுத்திவிட்டு, அந்த இடத்தைவிட்டு அகன்றான்.
இந்தப் பயங்கரமான காட்சிகளைத் தாமரை இமைகொட்டாது பார்த்துக் கொண்டிருந்தாள். அண்ணன் அங்கிருந்து போனதும் மெதுவாக வெளியே வந்து வீரர்களில் ஒருவனை அழைத்துச் சாய்ந்து