112
கலைஞர் மு. கருணாநிதி
"அதெல்லாம் கேட்காதே இப்போது! பெண் பிடித்திருக்கிறதா இல்லையா? அதை மட்டும் சொல்!'
...செழியனுக்கு ஏற்பட்ட வெட்கத்தின் மூலம் அவனுக்குச் சம்மதம் என்பதைப் பாண்டியன் உணர்ந்து கொண்டான்.
அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு நெடுநாட்கள் வரையில் செழியனின் திருமணம் பற்றிய பேச்சைப் பெருவழுதி எழுப்பவேயில்லை. ஓவியத்தில் தோன்றி தன் உள்ளத்தை நிலைகுலைத்த அந்த அழகி எங்கே இருக்கிறாள் என்ற ஆராய்ச்சியைச் செழியன் இன்னும் முடிக்கவில்லை. அதற்குள் எத்தனையோ சம்பவங்கள்! எந்தச் சம்பவமும் அவன் நெஞ்சில் ஒரு புதிய மாறுதலை ஏற்படுத்திய அந்தச் சித்திரத்துப்பாவை பற்றிய நினைப்பை அகற்றவில்லை.
'அப்படியொரு பெண் உலகில் இருக்கிறாளா? அல்லது ஓவியனின் கை வண்ணத்தால் உருப்பெற்ற கற்பனை அழகியா?' என்ற ஐயப்பாடு அவனை ஆட்டிப் படைத்ததுண்டு.
இப்போது அந்த வீண் சந்தேகம் நீங்கிவிட்டது. ஓவியத்துப் பெண்ணை உயிரோடு பார்த்துவிட்டான். எங்கே? எதிரியின் வீட்டில்! எந்த நிலையில்? கைகால்களில் விலங்கு மாட்டிக் கொண்டு வேதனை அனுபவிக்கும் நேரத்தில் அவளுக்கும் இருங்கோவேளுக்கும் என்ன தொடர்பு? என்ன உறவு? அவன் கேள்விகளுக்கு உடனடியாகப் பதில் தேவை. ஆனால், முதலில் அவள் கேள்விக்குப் பதில் கூறிடக் கருதினான்.
"தண்ணீர் வேண்டும்!" என்றான்.
அவள் ஒரு வீரனைக் கூப்பிட்டு அவனுக்கு உடனே தண்ணீர் தருமாறு கூறினாள். அந்த வீரன் தண்ணீரைக் கொண்டு வந்து செழியனின் வாயில் ஊற்றினான். அதைக் குடித்துவிட்டுக் கொஞ்சம் தெம்பாகக் கனைத்துக் கொண்டான். அண்ணனின் முரட்டுக் கரங்கள் செழியனின் கன்னத்தில் ஏற்படுத்திய வீக்கத்தை அவள் கவனிக்காமல் இல்லை. தண்ணீர் கொடுத்தவளுக்கு நன்றி தெரிவித்தான் செழியன். அவளும் "பரவாயில்லை" என்று பதிலுக்குக் கூறினாள்.
"நீயும் இந்த இடத்தைச் சேர்ந்தவள்தானோ?"
செழியனின் கேள்விக்கு அவள் என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் விழித்தாள்.
'ஆமாம்' என்றால் அவன் தன்னையும் கொடுமைக்காரர்களின் பட்டியலில் சேர்த்து விடுவான் - 'இல்லை' என்றால் நம்புவானோ. மாட்டானோ? - தாமரைக்குப் பதில் கூற நாவெழவில்லை.