120
கலைஞர் மு. கருணாநிதி
"நல்ல வேளை - முறிந்த மரம் உன் மீது விழவில்லை. நீ ஏன்யா இங்கு வந்தாய்?"
முத்துநகை சிறிது நேரம் மௌனமாக இருந்து விட்டு, "அதோ அங்கேயிருக்கிற மண்டபத்தில் தூங்கிக் கொண்டிருந்தேன். யாரோ மரம் வெட்டுகிற சத்தம் கேட்டது. ஒரு வேளை நீதான் வெட்டுவாய் என்று நினைத்து வந்தேன். ஆமாம்... இரவில்தான் மரம் வெட்டுகிற தொழிலா? திருட்டுத்தனமாக வெட்டுகிறாயா?” என்று கேட்டாள்.
மிக சாமர்த்தியமாக ஆண் குரலில் பேசுகிறாள் என்பதை ரசித்துக் கொண்டே நின்ற இருங்கோவேள் “ஆமாம்!" என்று தலையசைத்தான். அவளை மறுமுறையும் சந்திக்க வேண்டும் என்ற ஆவலில் தான் அவன் வந்திருக்கிறான் என்பது அவளுக்கு எப்படித் தெரியும்? தாமரை அவளை வீட்டுக்கு அழைத்து வந்து விட்டால். மீண்டும் சந்திக்கமுடியாமல் போய்விடுமோ என்ற சந்தேகத்தில் தான் அதற்குள் ஒரு தடவை பார்த்து விட வேண்டுமென்று ஓடி வந்திருக்கிறான். அவனுக்கு நன்றாகத் தெரியும். அவள் அருவிக்கரையில் உட்கார்ந்திருந்தது. ஆனாலும் மண்டபத்தில் படுத்திருந்ததாக அவள் சொன்ன பொய்யை நம்பியதுபோல் நடித்தான்! அருவிக் கரையில் அவள் இருந்ததைப் பார்த்துக் கொண்டேதான் மரம் வெட்டும் இடத்துக்கு வந்து சேர்ந்தான். அவள் கவனத்தைக் கவர்வதற்காகவே மரம் வெட்டுவது போல் பாசாங்கும் செய்தான். மரமும் விழுந்தது. அவளும் வந்து அவன் வலையில் விழுந்துவிட்டாள். இருங்கோவேள் அந்த இரவு அவளிடம் எதுவும் பேசாமல் பிரிந்துவிடலாம் என்ற எண்ணத்தில் வரவேயில்லை. அவள் பெண்தான் என்பதைத் தான் புரிந்து கொண்டதாகக் காட்டி, இன்ப உரையாடல்கள் -இனிய சுகம் ஆகியவற்றுடன் அந்த இருளை வழி அனுப்பிவைக்க வேண்டுமென்று துடிதுடித்துத்தான் அங்கு வந்தான். ஆயினும் அவனால் அவளுக்கு எதிரே அந்தத் துணிவைப் பெற முடியவில்லை.
"மரத்தை நாளைக்கு விறகாகப் பிளந்து கொள்கிறேன்; கொஞ்ச நேரம் தூங்கலாம். வாய்யா மண்டபத்துக்குப் போகலாம்!" என்று முத்துநகையை அழைத்தான்.
"இல்லை; நான் வரவில்லை!" என்றாள் அவள்.
"அட சரிதான் வாய்யா!" என்று கையைப் பிடித்து இழுத்தான் இருங்கோவேள்.
"ஊகூம்... எனக்கு வேலையிருக்கிறது."
"ராத்திரியிலே என்ன வேலை! எல்லா வேலையும் காலையிலே பார்த்துக்கலாம்; மழை வேற வரப் போகிறது. வாய்யா போகலாம்!" என்று மறுபடியும் இழுத்தான் இருங்கோவேள்,