பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

122

கலைஞர் மு. கருணாநிதி


முத்துநகை சிரித்துக் கொண்டாள்.

"சரி தூங்கலாம்!" என்று இருங்கோவேள் அவளிடம் கூறினான்.

முத்துநகையும் இனிமேல் பேசுவது ஆபத்து என்று கருதித் தூங்கலாம் என்று பதிலுரைத்துவிட்டு, மண்டபத்தின் ஒரு பக்கத்தில் படுத்துக் கொண்டாள். அவளுக்கு எழுந்த உணர்ச்சிகள் அவளை மிகவும் பயமுறுத்தின. ஏதாவது விபரீதம் ஏற்பட்டு விடுமோவென்று நடுங்கினாள். தூங்குவதுபோல் பாசாங்கு செய்து அவன் தூங்கியதும் ஓடி விடலாமென்றும் திட்டம் போட்டாள். இப்படிப் பயப்படுகிறவள் பிறகு எதற்காக வருகிறாள்? ஆசை வெட்கமறியுமா என்ன? அவளுக்கு அருகிலேயே அவனும் படுத்துக் கொண்டான். அதை அவள் எப்படித் தடுக்கமுடியும்? தடுத்தால் தான் பெண் என்ற உண்மையைச் சொல்லியாக வேண்டும். மூச்சைப் பிடித்துக் கொண்டு எதுவும் பேசாமல் தூங்குவதுபோல் நடிக்க ஆரம்பித்தாள். இருங்கோவேளுக்குத் தூக்கம் வருமா என்ன?

...சே சே சே! இந்த வெளிச்சம் வேறு தூக்கத்தைக் கெடுக்குது!" என்று முணுமுணுத்தவாறு எழுந்து தீப்பந்தத்தை அணைத்துவிடாமல் மண்டபத்திலுள்ள இடிந்த சுவருக்குப் பின்புறம் கொண்டுபோய் வைத்தான். பிறகு வந்து அவளருகே படுக்கப் போனான்.

"கொஞ்சம் விலகியே படு! இல்லாவிட்டால் எனக்குத் தூக்கம் வராது!" என்றாள் அவள்.

"சரி! சரி! தூங்கு!" என்று கூறியவாறு சிறிது விலகிப் படுத்துக் கொண்டான்.

இருவரும் தூங்குவது போல் நடித்துக் கொண்டிருந்தனர். இப்படிச் சிறிது நேரம் கழிந்தது. முத்துநகையின் கால்பக்கம் ஏதோ ஊர்வதைப் போல் ஓர் உணர்ச்சி. அப்படியே அசைவற்றுப் படுத்திருந்தாள். அவனுடைய கால் விரலாகத்தான் இருக்கும் என்று நினைத்தாள். நெஞ்சு 'திக் திக்' என்று அடித்துக் கொண்டது. காலில் ஊர்ந்து பொருள் வழவழ என்று தெரிந்தது.

"அய்யோ! பாம்பு பாம்பு!" என்று அலறி ஓடிப்போய் இருங்கோவேளை இறுகக் கட்டிக் கொண்டாள்.

"எங்கே? எங்கே?" என்று அவன் கேட்கிறானே தவிர ஓடிப்போய்த் தீப்பந்தத்தை எடுத்து வருவோம் என்ற எண்ணம் அவனுக்கு வரவேயில்லை. எப்படி வரும்? அவளல்லவா அவனை அணைத்துக் கொண்டிருக்கிறாள்? பிறகு அவளே தன்னை விடுவித்துக் கொண்டதும் தீப்பந்தத்தை எடுத்து சுற்றும் முற்றும் பார்த்தான். பச்சிலைச் செடியுடன்