ரோமாபுரிப் பாண்டியன்
123
அவன் கொண்டுவந்து போட்ட அதே பாம்பு தான் அங்கே ஊர்ந்து ஓடிக் கொண்டிருந்தது. வேகமாக ஓடி அதன் வாலைப் பிடித்துக் கர கரவெனச் சுற்றி மண்டபத்துத் தூணில் அடித்தான். பாம்பு செத்து வீழ்ந்தது.
"ம்! வீராதி வீரனே! பயப்படாமல் படுய்யா!" என்று அவளைத் தட்டிக் கொடுத்தான்.
"ஊகூம், எனக்கு பயமாயிருக்கு நான் போகிறேன்" என்றாள் முத்துநகை.
"இதோ, வெளிச்சத்தை இங்கேயே வைக்கிறேன்." பயமில்லாமல் தூங்கு!" என்று தீப்பந்தத்தை அங்கேயே வைத்தான்.
தானும் படுத்துக் கண்களை மூடிக் கொண்டான். வெளியே மழை பொழிந்து கொண்டிருந்தது. கண்மூடித் தூங்குவதுபோல் படுத்திருந்த முத்துநகையின் தலைப்பாகையில் அவன் கைபட்டது. அவளுக்குத் தூக்கிவாரிப்போட்டது. பாம்பைக் கண்டு பயந்து அவனை அணைத்துக் கொண்டதை நினைத்து நினைத்து நெஞ்சில் இனிப்பேற்றிக்கொண்டு படுத்திருந்த அவளுக்குமேலும் ஒரு நெருக்கடி!
தலைப்பாகையில் பட்ட அவன் கையைப் பிடித்து, "என்ன இது?" என்றாள் அதட்டலாக.
"அட, ரொம்பக் குளிருதய்யா! தலைப்பாகைத் துணியைக் கொடு! உடம்புக்குப் போர்த்திக்கிறேன்" என்று சொல்லிக் கொண்டே, அவள் தடுத்தும் கேளாமல் அவளது தலைப்பாகையை அவிழ்க்கத் தொடங்கினான் இருங்கோவேள்.
அதற்குமேல் முத்துநகையால் தடுக்க முடியவில்லை. அவனை அறவே வெறுத்திருந்தால் அப்படியொரு நிலைமை ஏற்பட்டே இருக்காது. முதல் சந்திப்பிலேயே முகத்தை முறித்துப் பேசிவிட்டுப் போயிருப்பாள். இப்போதோ இரண்டும் கெட்டான் நிலை. அவிழ்ந்த தலைப்பாகை அவன் கையிலே. அலை அலையாய்ச் சுருண்டு அடர்த்தியாகத் தொங்கும் கூந்தல் அவள் தலையிலே. முன்பே இது அவனுக்குத் தெரியும் என்றாலும், இப்போது தான் தெரிந்தவனைப் போல, "ஆ?" என்று வியப்புச் சொல் உதிர்த்துவிட்டு அசையாமல், அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.
அவளும் இனிமேல் நடிக்க இயலாது என்பதைப் புரிந்து கொண்டாள். என்னதான் இரும்புக் கம்பியை நட்டு வைத்து அதன் மீது ஏற்றிவிட்டாலும் கொடி துவண்டு துவண்டு நெளிந்து படருமே தவிர, கம்பீரமாக ஆண்மை காட்டி நிற்குமா என்ன?