ரோமாபுரிப் பாண்டியன்
125
"இல்லை, நானும் தான் காரணம்? நீ ஒரு பெண் என்பதை முதலிலேயே தெரிந்து கொண்டுதான் உன்னிடம் இவ்வளவு தூரம் பழகினேன்" என்றான் இருங்கோவேள்.
"எப்படித் தெரியும் உங்களுக்கு?"
"நீ மண்டபத்துக் குளத்தில் குளிக்கும்போது...
அவன் பேச்சை முடிக்கவில்லை. அவள் வெட்கத்தால் முகத்தை மூடிக் கொண்டாள்.
"அதிருக்கட்டும் - உன் உண்மையான பெயர் என்ன?"
"முத்துநகை!"
"ஆகா பொருத்தமான பெயர்! நீ எதற்காக இந்த உடையில் இப்படிக் காட்டில் திரிய வேண்டும்?"
"அதுதான் முன்பே சொன்னேன், முக்கியமான இலட்சியம் ஒன்று இருப்பதாக!"
"அது என்ன இலட்சியம் என்று என்னிடம் விவரமாகக் கூறக்கூடாதா?"
"உங்களை யாரென்று புரிந்து கொண்ட பிறகு சொன்னால் என்ன? நிச்சயம் சொல்லத்தான் போகிறேன்."
"நான் ஒரு சாதாரண விறகுவெட்டி! அவ்வளவு தான்!"
"என்னையொன்றும் நீங்கள் ஏமாற்ற முடியாது. நீங்கள் யார் என்பதற்கு என்னிடம் ஆதாரமே இருக்கிறது!"
"ஆதாரமா?" - திடுக்கிட்டுக் கேட்டான், இருங்கோவேள்
"இதோ! என் விரல் வீக்கத்திறகுப் பச்சிலை கொண்டு வரப் போனீர்களே; அப்போது தவறிப்போய் இந்த மண்டபத்தில் நீங்கள் விட்டுப்போன ஓலை!" என்று கூறி ஓர் ஓலைச் சுருளை எடுத்து அவனிடம் நீட்டினாள்.
அதை வியப்போடு பார்த்த இருங்கோவேள் சமாளித்துக் கொண்டு, "இந்த ஓலைக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்?" என்று தெரியாதவனைப் போல விழித்தான்.
தான் தவறிப் போட்டுவிட்ட ஓலைச்சுருளைப் பார்த்து, தான் இன்னார் என்பதை முத்துநகை புரிந்து கொண்டு விட்டாள் என்று உணர்ந்த இருங்கோவேள், ஒன்றும் தெரியாதவனைப்போல, "இந்த ஓலைக்கும்