12
கலைஞர் மு. கருணாநிதி
கற்பனையே வறட்சியாக இருக்கவேண்டுமென்றால் நூல் உருவாகியிருக்காது. இதை நீங்கள் சிறிது மனதில் வாங்கிக் கொள்ள வேண்டும். இது இந்த நூலின் ஒரு சிறந்த அம்சம். பல வரலாற்றுச் சான்றுகளைக் கொண்டது. ஆனால் கற்பனையினால் பெருகியிருப்பது. கற்பனை ஒன்றும் வரலாற்றுச் சான்றுக்குப் புறம்பாகவோ எதிர்த்தோ இல்லை. அதற்கு ஒரு சிறு இலக்கணம் கூறலாம். அதற்கு ஆங்கிலத்தில் Anachronism என்று சொல்கிறார்கள். நான் தமிழாக்கம் செய்தால் 'இடம், பொருள், ஏவல், முரண்பாடு' என்று கூறுவேன். இடம். பொருள், ஏவல், முரண்பாடு இருக்கக்கூடாது. வரலாற்றுச் சான்று தழுவிய நவீனத்தில், இங்கு இருந்த ஒரு பாண்டியன் ஒரு மோட்டார் காரை ஓட்டிக்கொண்டு போனான் என்று எழுதினால் அதை ஒத்துக்கொள்ள முடியாது. அந்தக் காலத்தில் ரோமாபுரியிலும், தமிழிலும் ஒருவருக்கும் புலப்படாத ஒரு விஞ்ஞானச் செய்தியோ, மற்றச் செய்தியோ இதில் புகுந்தால் இடம்,பொருள், ஏவல், முரண்பாடு ஆகும். அந்த முரண்பாடுகள் சிறிதும் இல்லாமல் கலைஞர் மிகத் திறமையாக இதை எழுதியிருக்கிறார். ஆனால் இதுவும் ஒரு இல்லாமையின் குணம், குற்றம், 'நெகடிவ் வர்ச்சு (Negative Virtue) என்று கூறலாம். இதில் சிறப்பான குணங்கள் என்ன என்று நீங்கள் கேட்கலாம். நான் சிறிது கூறுகிறேன். நான் அதிகமாகப் பேச விரும்பவில்லை, சிறிதே கூறுகிறேன். இதில் முதல் சிறப்பான குணம் என்னவென்றால் வரலாற்றுச் சான்றுகளை அடிப்படையாகக் கொண்ட, முழுவதும் நடந்திருக்கக் கூடிய கதாபாத்திரங்களும், 'கருவூலம்' (பிளாட் என்று சொல்கிறோம் அல்லவா?) அதுவும் கூடிய இந்த நூல் மிகத் திறமையாக எழுதப்பட்டதில் அந்தக் காலத்துத் தமிழர்வளம், தமிழர் பண்பு, தமிழர் குணம், தமிழர் வீரம், பெண்மையின் திண்மை இவைகள் எல்லாம் விளக்கப்பட்டிருக்கின்றன. இவை எல்லாம் ஓரளவு கற்பனையாக இருக்கிறதே, அந்த நாட்களிலும் பல குறைகள் இருந்திருக்க வேண்டுமே என்று சிலர் நினைக்கலாம்.
அண்மையில் சில அமெரிக்கர்களுக்கு நான் தமிழ்நாட்டின் சிறப்புக் குறித்து, அதாவது கி.மு. 2 முதல் கி.பி.2 வரை தமிழ்நாட்டில் உள்ள வளங்களைப் பற்றிப் பேச வேண்டியிருந்தது. அப்போது பல நூல்களைப் படித்துத் தமிழிலிருந்து ஆங்கில ஆக்கம் செய்து அவர்களுக்கு விளக்கிக் காட்டினேன். அப்போது முக்கியமாக எனக்குப்பட்டது என்னவென்றால் தமிழில் நாம் அகம், புறம் என்று கூறுகிறோம். அதாவது, ஆண்-பெண்ணிடையில் வயது வந்த பிறகு முதலில் குறை குற்றம் இல்லாமல் ஒருவருக்கு ஒருவர் நேசமாக நேரிடும் அன்பு என்னும் காதலின் மாண்பு; இரண்டாவது வீரம். போரில் வீரம், போர்க்களத்தில் வீரம், போர்க்கள வீரனின் தாய்மாரின் வீரம். இவை இரண்டும் தமிழில்- தமிழ் இலக்கியத்தில் - பெரும் சுவைகளாக அமைந்திருக்கின்றன. இவை இரண்டும் இந்த நூலிலும் மிகப் பெரிய சுவைகளாக அமைந்திருக்கின்றன. ஆகையால் மிகையாகக் கூறல் என்ற (அதிக யுக்தி என்று சொல்வார்கள் வடமொழியில்) அந்தக் குற்றத்திற்கு இந்த நாவலாசிரியர் ஆளாகவில்லை என்பது என்னுடைய நீதிமன்ற அபிப்பிராயம் என்று கூறலாம்.