பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

144

கலைஞர் மு. கருணாநிதி


தன் அண்ணனின் பெருமையை இழிவுபடுத்துவது போன்ற வார்த்தைகளைத் தாமரையால் கேட்டுக் கொண்டிருக்க முடியவில்லை. ஆனாலும் சோர்ந்து போய்க் கிடப்பவனிடம் மேலும் மனம் புண்படும் படியாகப் பதில் கூறுவது கூடாது என்று பேசாதிருந்து விட்டாள்.

செழியனுக்கோ அவளிடம் இன்னும் பேச வேண்டும் என்பது போன்ற உணர்ச்சி. "உன்னோடு சிறிது நேரம் நான் தனியாகப் பேச வேண்டும்! அனுமதி கிடைக்குமா?" என்று கொஞ்சும் தோரணையில் கேட்டான்.

முதலில் ஒரு தடவை அவனிடம் பேச்சுக் கொடுக்காமலே சமாளித்துக் கொண்டு போயிருக்கிறாள் அவள். ஆனாலும் இப்போது செழியனின் வேண்டுகோளை வெளிப்படையாக அவளால் புறக்கணிக்க முடியவில்லை.

செழியனை ஒருமுறை ஏற இறங்கப் பார்த்துவிட்டுத் தாமரை. வீரர்களைச் சைகை செய்து வாசலிலே போய் நிற்கச் சொன்னாள். அவர்களும் தீப்பந்தத்தை அங்கேயே சேற்றில் செருகி நிற்க வைத்துவிட்டு, வாயிற்பக்கம்போய் எச்சரிக்கையுடன் காவல் நின்று கொண்டார்கள்.

"ம்! என்ன பேச வேண்டும்? சீக்கிரம் பேசுங்கள்!" என்றாள் தாமரை.

"நான் மாத்திரம் சொற்பொழிவாற்றிக் கொண்டிருக்க மாட்டேன். நீயும் என் கேள்விகளுக்குச் சில விளக்கங்கள் தரவேண்டும்." என்றான் செழியன்.

"மிக நன்றாயிருக்கிறதே! எதிரி நாட்டு வீரருக்கு எங்களைப் பற்றிய விளக்கங்களைத் தந்து நாங்கள் ஏமாந்து போக வேண்டுமோ?"

"அப்படிப்பட்ட செய்திகள் எனக்கொன்றும் தேவையில்லை. அது போன்ற உண்மைகள் எனக்குக் கிடைத்தாலும் எப்படி இங்கிருந்து வெளியே செல்ல முடியும்! நீங்கள்தான் என் பிணத்தைக்கூட வெளியே போடமாட்டீர்களே! ஒரு வேளை என் பிணத்தை வெளியே போட்டு, நாய், நரி, கழுகு ஏதாவது என் உடலைக் கீறி, இதயத்தை எடுத்துக் கொண்டு போய்ப் பாண்டிய மண்டலத்திலோ சோழமண்டலத்திலோ போட்டுவிட்டால் என் இதயம் பாண்டிய-சோழ மண்டலங்களுக்குச் சொந்தம் என்ற உண்மை நிலை பெற்று விட்டால் என்ன செய்வது? தவறிப் போய் ஒரு காக்கை என் நாக்கைக் கொண்டு போய்ச் சோழர் எதிரில், பாண்டியர் எதிரில் போட்டு, உடனே என் நாக்கு, புராணத்தில் வரும் நாக்குப் போலப் பேச ஆரம்பித்து, உங்களைப் பற்றிய உண்மைகளைச் சொன்னாலும் சொல்லிவிடக்கூடும் இல்லையா?