பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வெளியில் வந்த இருங்கோவேள் தாமரையைப் பார்த்து, "என்ன செய்தி? அண்ணி எப்படி இருக்கிறாள்? நீ சொன்ன அந்த ஊமை மருத்துவன் வந்தானா?" எனக் கேட்டான்.

"வந்திருக்கிறான்; மருத்துவம் ஆரம்பிக்கப் போகிறான்" எனப் பதிலுரைத்தாள் அவள்.

"அவனை நமது காவலர்கள் யாரும் தடுக்காமலும் தொந்தரவு செய்யாமலும் இருக்கட்டும். அவன் விருப்பத்துக்கு வெளியில் சென்று மூலிகைகள் தயாரித்துக் கொண்டு வரட்டும். இந்தா! இந்த முத்திரை மோதிரத்தை அவன் கையில் மாட்டிவிடு. அப்போதுதான் காவலர்கள் தொல்லை இருக்காது அவனுக்கு. அந்த மருத்துவனைப் பற்றி நான் கூடக் கேள்விப்பட்டேன். வாலிபனாம், வடிவழகனாம்; ஊமையாக இருந்தாலும் மருத்துவத்தில் தலை சிறந்தவனாம். ஊரார் சொல்லக் கேட்டேன். நீ அழைத்து வந்திருப்பவனும் நான் கேள்விப்பட்ட வனாகத்தான் இருக்க வேண்டும் என நினைக்கிறேன். எப்படியோ அரசிக்கு நோய் தீர்ந்தால் போதும். அதற்கு வேண்டிய வசதிகளை யெல்லாம் அந்த மருத்துவனுக்குச் செய்து கொடு. நமது அரண்மனையில் எத்தனையோ வசதி! இங்கே என்ன செய்வது? பரவாயில்லை. நடக்கிற வரையில் நடக்கட்டும். நீ போ தாமரை!" என்றான். அவளும் போக ஆரம்பித்தாள்.

"ஒன்று சொல்ல மறந்துவிட்டேன். நான் அரசியிடம் வந்து பேசிக் கொண்டிருக்கும்போதோ அல்லது உன்னைக் காணவரும்போதோ அவனில்லாமல் இருப்பது நல்லது. ஏனெனில் அவன் ஒருவேளை ஒற்றனாக இருந்தால் ...!" என இழுத்தாற் போல் கூறினான் அவன்.

"அப்படியெல்லாம் இல்லை. மிகவும் நல்ல மருத்துவன். எதற்கும் நாங்கள் எச்சரிக்கையாக இருக்கிறோம்." என்றவாறு தாமரை அதைவிட்டு அகன்றாள். அவள் உள்ளத்தில் குதூகலம் இல்லை. ஏதோ ஒரு விவரிக்க முடியாத சங்கடம் அவளை ஆட்டிப் படைத்தது.

இருங்கோவேள், நேரே தன் இருப்பிடத்திற்குச் சென்று அமைச்சரிடம், செழியனின் கடிதத்தைப் படித்துக் காட்டினான். அமைச்சர் விகாரமாகச்