பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ரோமாபுரிப் பாண்டியன்

157


சிரித்து மன்னனின் திறமையை மெச்சினார். திறமைமிக்க ஒருவன் மூலம் உடனே ஓலையைப் பாண்டியருக்கு அனுப்பத் தீர்மானிக்கப்பட்டது. நல்ல பலமிக்க வீரர்கள் வரிசையாக நிறுத்தப்பட்டனர். அமைச்சர் அவர்களைக் கூர்ந்து கவனித்து இறுதியில் ஒருவனைத் தேர்ந்தெடுத்தார். அவன் பெயர் கொடுங்கோல்! பாண்டியனிடம் பத்திரமாக ஓலையைச் சேர்க்க வேண்டிய பொறுப்பு அவனிடம் ஒப்படைக்கப் பட்டது.

பாண்டிய நாட்டுத் தலைநகரம் மிகவும் பரபரப்பாகக் காணப்பட்டது. புன்னகை பூத்த முகத்துடன் வீரர்கள் கூட்டம் கூட்டமாகச் சென்று கொண்டிருந்தனர். அவர்கள் செல்லும் அழகை வீதியோரங்களில் நின்று வயது முதிர்ந்தோர் கண்டு களித்தனர். வீதியிற் சென்று கொண்டிருக்கும் வீரர்களின் கூட்டம் மேலும் மேலும் பெருகி விடும் விதத்தில் ஒவ்வொரு வீட்டிலிருந்தும் வீரர்கள் வந்து கூட்டத்தில் நுழைந்து கொண்டனர். அவர்களை வழியனுப்பி வைத்து விட்டு வைத்த விழி வாங்காது அவர்களையே பார்த்துக் கொண்டு அவர் தம் துணைவியர் வாயிற்படிகளில் நின்று கொண்டிருந்தனர்.

எல்லா வீரர்களும் தங்கள் தங்கள் வீடுகளில் 'போருக்குப் போய் வருகிறேன்' என்று கூறிட முடிந்ததே தவிர, எந்தப் போருக்கு ? எங்கே? யாரை எதிர்க்க? என்ற விவரங்களை விளக்கிட முடியவில்லை. காரணம் அந்த விவரம் அவர்களுக்கே அறிவிக்கப் படவில்லை. தினவெடுக்கும் தோள்களுக்கு வேலை வந்தால் போதும் என்ற துடிதுடிப்பு அந்த வீரர்களுக்கு! அவர்களின் மார்பில் ஏந்தி வரும் விழுப்புண்களுக்கு முத்தமீந்து ஆற்றிட வேண்டுமென்ற தணியாத ஆசை, அவர்களைத் தழுவி மகிழ்ந்த காதலியர்க்கு!

"என் மகன் பட்ட காயம் எங்கே தெரியுமா? நெஞ்சாங்குழியில்!" எனக் கூறிப் பெருமையடைய வேண்டுமென்ற ஆத்திரம் கிழவிகளுக்கு!

"எதிரிகளின் இருதயத்தில் அவர்களின் பற்களைத் தட்டிப் போட்டு நம் குழந்தைகளுக்குக் கிலுகிலுப்பைக் கொண்டு வாருங்கள் அத்தான்," என்று விடை கொடுத்தனுப்பிய தாய்மார்களின் வீரக் குரல் பாண்டியன் தலைநகரமெங்கும் ஒலித்துக் கொண்டிருந்தது.

பல நாள் பட்டினி கிடந்த புலிக்கூட்டம், திடீரெனக் கண்ணில் பட்ட மான்கூட்டத்தை நோக்கிப் புறப்பட்டது போலப் பாண்டிய நாட்டு வீரர்கள் போருக்குப் புறப்பட்டார்கள். அரண்மனை முகப்பில் மீன் கொடி வெகு கம்பீரமாகப் பறந்து கொண்டிருந்தது. அந்தக் கொடி நிழலில் ஒலித்துக் கொண்டிருந்த முரசம் போர் வீரர்களை உணர்ச்சி வடிவங்களாக ஆக்கிக் கொண்டிருந்தது. கொடி மரத்தடியில் பாண்டிய நாட்டுத் தளபதி நெடுமாறன் புரவியில் அமர்ந்து வீரர்கள் அணிவகுப்பைக் கண்காணித்துக் கொண்டிருந்தான்.