பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

164

கலைஞர் மு. கருணாநிதி


மகிழ்ச்சி ஆரவாரத்தில் வளரும் காதல், நீர் வீழ்ச்சியின் அடியில் சிக்கிய மலர் போலக் கசங்கி விடுவதும் உண்டு. கண்ணீரில் மலரும் காதல், சேற்றில் மலரும் செந்தாமரையாகக் காட்சி தருவதும் உண்டு. இதில் இரண்டாம் வகைக் காதலை அவர்கள் வளர்த்தனர். அவர்களுக்கு எந்தக் குழப்பமும் இல்லை, காதலைப் பற்றிய மட்டில்!

ஆனால் அவன் தான் புயலானான். தூய்மையான காதலை வளர்த்துக் கொண்ட பிறகு அவளை ஏமாற்றுவது சரியா என்று எண்ணி எண்ணி ஏங்கினான். அவள் இருங்கோவேளுக்கு எதிரிதான். ஆனால் அவனுக்கு அருமைக் காதலி! அவளில்லாது இனிமேல் அவனால் உயிர் வாழ முடியாது. அதற்காக அவன் நாடிழந்து நகர்இழந்து அரச பதவியிழந்து ஆண்டி போல் காட்டில் உலவிக் கொண்டிருக்கவும் முடியாது. இப்படி ஓர் அமைதியற்ற உளைச்சேற்றில் மாட்டிக் கொண்டு அவன் திணறிக் கொண்டிருந்தான்.

வெறித்து ஆகாயத்தைப் பார்க்கிறான். வீரம் பிறக்கிறது கண்களில்! மீசைகள் பயங்கரமாகத் துடிக்கின்றன! நெஞ்சம் கனலாக மாறுகிறது. பூமியை உற்று நோக்குகிறான். இந்த மண்ணில் சிறு பகுதியும் தன் ஆட்சிக்கு உட்பட்டதில்லை என்று பெருமூச்சு விடுகிறான். மூச்சின் காற்றுப்பட்டுப் புழுதி பறக்கிறது. கால்களை ஓங்கி உதைக்கிறான் தரையில்.

விவரம் புரியாமல் முத்துநகை அவனை வியப்புடன் பார்க்கிறாள். அவனும் பார்க்கிறான்.

ஆவேசம் படர்ந்திருந்த முகத்தில் அன்பு ஒளி!

"கண்ணே!" என்று அவளை அணைத்துக் கொள்கிறான்; அவளிடம் உண்மையைச் சொல்லிவிட வேண்டும் போல் இருக்கிறது. நெஞ்சில் ஓங்கி ஓர் அடி விழுகிறது. 'பைத்தியக்காரா! என்ன காரியம் செய்யத் துணிகிறாய்? உண்மையைச் சொன்னால், காதல் காற்றில் பறந்துவிடும். காதலி காளியாகி விடுவாள். எச்சரிக்கையாக இரு!' என்ற உணர்வை அந்த அடி எழுப்புகிறது போலும்! பிறகுதான் தெரிகிறது அவனேதான் அவன் நெஞ்சில் அடித்துக் கொண்டிருக்கிறான்! குழப்பத்திலும் மௌனமாக இன்பத்திலும் சிறிது நேரம் கழிந்தது.

"நேரமாகிறது அத்தான்! தாமரை தேட ஆரம்பித்து விடுவாள். பிறகு ஆபத்து-நான் போகட்டுமா?"

"போவதா? இப்போது நீ போக முடியாது. உனக்கு ஒரு பெரிய வேலையிருக்கிறது."

"என்ன வேலை?"