170
கலைஞர் மு. கருணாநிதி
"அப்படியானால் நீங்கள்தான் அவரைக் கொன்று விட்டீர்களா?" தாமரை திடுக்கிட்டுக் கேட்டாள்.
"நான் ஏன் அவனைக் கொல்ல வேண்டும்? அவனே செத்து விட்டான். புலி அடித்ததும் மருத்துவன் செத்துவிட்டான். ஆனால் அதில் ஓர் ஆச்சரியம் என்னவென்றால், புலியின் நகம் பட்டதும் மருத்துவன் மங்கையாக மாறிவிட்டான். மருத்துவன் செத்தான்; மங்கை தோன்றினாள்!"
"என்ன அண்ணா? எனக்கொன்றும் புரியவில்லையே!"
"புரியாதுதான்! ஆமாம் தாமரை; உன் அண்ணனுக்குப் போர்ப் புலியென்று ஒரு பட்டம் உண்டல்லவா? ஞாபகம் இருக்கிறதா உனக்கு?"
"அதற்கென்ன?"
"இந்த புலிதான் அந்த மருத்துவனைக் கொன்றது. கொன்றதும், மருத்துவன் மங்கையாக மாறிவிட்டான். இன்னும் உனக்குப் புரியவில்லையென்றால் சொல்கிறேன் கேள்? நீ யாரிடத்திலே உள்ளத்தைப் பறி கொடுத்திருக்கிறாயோ, அவன், நீ நினைப்பதுபோல ஆடவன் அல்ல, அழகான ஆரணங்கு.
அதுமட்டுமல்ல, எதிரிநாட்டு அரசர்களின் துணையோடு நம்மை அழிக்க வந்தவள். அவளை நான் கண்டுபிடித்து விட்டேன். ஆனாலும் தெரியாதவனைப் போல நடித்துக் கொண்டிருக்கிறேன். நீயும் அவளிடம் எச்சரிக்கையாக நடந்து கொள்."
"நீங்கள் சொல்வதை நம்பலாமா அண்ணா?"
"ஒரு தங்கையிடம் அண்ணன் இதைவிட அதிகமாக என்ன பேச முடியும்? அவள் எங்கும் போய்விடப் போவதில்லை. திரும்பி இங்குதான் வரப்போகிறாள். அப்போது நீயே அவளைச் சோதித்துப் பார்த்துக் கொள். நான் இதைச் சொல்வதற்கு காரணமே, ஏமாற்றத்தால் உன் உள்ளம் உடைந்து விடக் கூடாதே என்பதற்காகத்தான்! முடிந்தால் நானே அவள் யாரென்று உனக்கு நிரூபித்துக் காட்டுகிறேன். எப்படியாவது அந்தச் செழியனை இங்கிருந்து விடுவித்துக் கொண்டு போவதற்காகவே அவள் வந்திருக்கிறாள்."
அண்ணன் தந்த தகவலைக் கேட்டுத் தாமரை இடிந்து போனாள். இருப்பினும் அவளுக்கு ஓர் ஆறுதல், அதே சமயம் தாங்க முடியாத வெட்கம், ஒரு பெண்ணையா காதலித்தோம் - என்று.
தனக்கு எதிராக மரமாளிகையில் நடைபெறும் உரையாடல்களைப் பற்றிச் சிந்தனை கூட இல்லாமல் முத்துநகை தன் காதலன் தனக்கிட்ட