172
கலைஞர் மு. கருணாநிதி
அவனுக்கு இவ்வளவு குழப்பமில்லை. பாண்டியனுக்கும் தனக்கும் ஏற்பட்டுள்ள நட்புரிமைக்குக் களங்கம் ஏற்படும் வகையில் எதுவும் நடந்துவிடக் கூடாதேயென்று மிகவும் அஞ்சினான். அப்படி நட்புரிமை கெடுவது தன் ஆட்சிக்குப் பலக்குறைவு என்று அவன் எண்ணி வருந்தவில்லை. தான் வளர்த்து வரும் பண்பாட்டுக்கு ஊறு நேரிடுமே என்றுதான் கவலைப்பட்டான்.
இவ்விதம் மனப் போராட்டத்தில் திண்டாடிக்கொண்டிருந்தவனின் முன்னே மெய்க்காப்பாளன் தோன்றி முத்துநகை வந்திருப்பதை அறிவித்தான். "அழைத்து வா!" என்று ஆவலுடன் கூறிவிட்டு, வாயிற்பக்கமே விழி வைத்துக் காத்திருந்தான்.
அவளும் மன்னனை வணங்கியவாறே எதிரே வந்து நின்றாள். அரசனின் கண் அசைவு மூலம் நோக்கத்தைப் புரிந்துகொண்ட மெய்க் காப்பாளனும் அந்த இடத்தை விட்டு நகர்ந்தான். அவளை உட்காரச் சொல்லிவிட்டு, தானும் எதிரே உட்கார்ந்து அவள் என்ன சொல்லப் போகிறாள் என்பதையே ஆவலுடன் எதிர்பார்த்தான் மன்னன்.
"பாண்டியர்கள் படை, இருங்கோவேளை எதிர்த்துப் புறப்பட்டு விட்டது மன்னவா!"
"என்ன? பாண்டியப் படையா? இருங்கோவேளை எதிர்த்தா?" -கரிகாலன் வியப்பிலாழ்ந்தான்.
"ஆம் மன்னவா, பாண்டிய மன்னரின் ஒற்றர் ஒருவர் மூலம் அறிந்து கொண்டேன்."
"அப்படியானால் செழியனை உயிரோடு மீட்கும் உத்தேசம் இல்லையா?"
"செழியனை மீட்பதற்காகவே படையெடுப்பாம்! ஆனால் அந்தச் செய்தி இருங்கோவேளுக்குத் தெரிந்து விட்டது. அவன் எச்சரிக்கையாக இருக்கத் திட்டம் தீட்டி விட்டான்."
"இதெல்லாம் உனக்கு எப்படித் தெரியும்?"
"எல்லாம் இந்த வேடத்தின் மகிமையால்தான். அன்று தங்களிடம் தெரிவித்தவாறு இருங்கோவேளின் கோட்டைக்குள்ளேயே நுழைந்து விட்டேன். செழியன், இருங்கோவேளின் சிறையிலேதான் அடைக்கப் பட்டிருக்கிறார். பாண்டிய மன்னருக்குச் செழியன் எழுதியதுபோல் ஓர் ஓலை எழுதி அதை ஒரு வீரன் வாயிலாக இருங்கோவேள் அனுப்பி வைத்தான்!"
"என்ன ஓலை அது?" -கரிகாலன் ஆச்சரியத்தோடு கேட்டான்.