ரோமாபுரிப் பாண்டியன்
181
குதித்தான். குதித்தவன் சுற்றிலும் பார்த்துவிட்டுச் சிரிக்க ஆரம்பித்தான். "ஒருவனை எதிர்க்க இத்தனை வீரர்களா?" இதைக் கேட்டுவிட்டு மறுபடியும் சிரிக்கத் தொடங்கினான்.
ஆத்திரமடைந்த ஒரு பாண்டியநாட்டு வீரன், "ஏய் நிறுத்து! சிரித்தது போதும் ! பாம்பை அடிக்கப் பத்து பேர் கூடுவது தான் வழக்கம்! அது பயத்தால் அல்ல - பாம்பு நழுவி விடுமோ என்ற சந்தேகத்தால்!" எனக் கூறியவாறு வாளை ஓங்கினான்.
உடனே தளபதி நெடுமாறன் அவனைத் தடுத்து நிறுத்தி, குதிரையில் வந்தவனை அருகே அழைத்து, "நீ யார்? எங்கு வந்தாய்?" என்று விசாரித்தான்.
"நான் வேளிர்குடி வீரன்; இருங்கோவேள் மன்னரே என் தலைவர்! மன்னரின் புதிய நண்பர் செழியன் என்னைத் தங்களிடம் அனுப்பினார்."
குதிரை வீரனின் பதில் நெடுமாறனைத் திகைப்பில் ஆழ்த்தியது.
"என்ன வீரனே! என்ன சொல்கிறாய்? மன்னர் இருங்கோவேளின் நண்பர் செழியனா? ஓகோ... போர் முறையில் நீங்கள் கண்டுள்ள புதிய முறை இதுவோ? மிக மிக வேடிக்கை. மேலும் சொல் கேட்போம்!" எனக் கேலி மொழிந்தான் நெடுமாறன்.
"வார்த்தைகளைச் செலவிடுவானேன்? இதோ இருக்கிறது செழியன் தந்த ஓலை. இதைப் பாண்டிய மன்னரிடம் கொடுக்க வேண்டுமென என்னை அனுப்பினார். வழியில் தங்களைச் சந்தித்தது நல்லதாயிற்று. தாங்களே இதைப் பாண்டிய மன்னரிடம் சேர்த்துவிடுங்கள்" எனக் கூறியவாறு ஓலையை எடுத்துத் தளபதியிடம் நீட்டினான் அவன்.
தளபதி, ஓலையை ஒரு முறைக்கு இரு முறை படித்தான். பின்னர், தன்னையே நம்பாமல் தன்னுடன் இருக்கும் துணைத் தளபதிகளிடம் கொடுத்துப் படிக்கச் சொன்னான். தளபதிகள் ஒருவர் முகத்தை ஒருவர் பரிதாபமாகப் பார்த்துக் கொண்டனர். நெடுமாறன் முகம் சிவப்பேறியது. அவன் மீசைக் கற்றைகள் துடித்தன. விழிகளில் கனல்! இடக் கரத்தில் வலக்கரத்தால் ஓங்கிக் குத்திக் கொண்டு அங்குமிங்கும் நடந்தான். "துரோகி! செழியன் துரோகி!" எனப் பலங்கொண்ட மட்டும் கத்தினான். எதிரி நாட்டு வீரன் எதிரே நிற்கிறான் என்பதையும் மறந்துவிட்டு உறுமினான். நெடுமாறனின் ஆவேசத்தையும் துணைத்தளபதிகளின் கலக்கத்தையும் வெகு அலட்சியமாகப் பார்த்துக் கொண்டிருந்த வேளிர்குடிவீரன், "நான் வருகிறேன். வணக்கம்" எனக் கூறியவாறு குதிரையில் ஏறி உட்கார்ந்து, அந்த இடத்தை விட்டு வேகமாகப் பறந்து