பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/177

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

184

கலைஞர் மு. கருணாநிதி


அனுப்பினார்; போர் துவங்குவதற்கு முன்பு தங்களுடன் பேச வேண்டுமென்று அவர் விரும்புகிறார். இப்போது போர் துவங்குவது பற்றியே சந்தேகம் வளருமளவுக்கு நிலைமை ஏற்பட்டிருக்கிறது. ஆகவே இந்த வேளையில் தாங்கள் கரிகாற் சோழரைச் சந்திப்பது எல்லா வகையிலும் நன்மை பயப்பதாகவே அமையும்!" என்று புலவர் வந்த காரியம் பற்றிய பேச்சைத் தொடங்கினார்.

"சோழரைச் சந்திப்பதா? பாண்டிய மன்னரின் அனுமதி இல்லாமலா?..." நெடுமாறன் சிந்தனையிலாழ்ந்தான்.

"நட்புரிமையுடன் கூடிய இரு நாடுகள்தானே பாண்டியமும் சோழமண்டலமும்! ஒரு நாட்டின் தளபதி இன்னொரு நாட்டின் மன்னரைச் சந்திப்பது தவறல்லவே. இது பற்றிப் பாண்டியர் தவறாகக் கருதமாட்டார் என்பதற்கு நான் பொறுப்பு. அதுமட்டுமல்ல,நானே இந்த ஏற்பாட்டைச் செய்தேன் என்று கேள்விப்பட்டால் பெருவழுதிப் பாண்டியர் மகிழ்வாரே தவிர மறுத்துரைக்க மாட்டார்!" என்று புலவர், நெடுமாறனை இணங்கச் செய்யும் அளவுக்குத் தைரியம் அளித்தார்.

பின்னர், நெடுமாறனும் கரிகாற் சோழரைச் சந்திப்பதற்குப் புறப்படத் தயாரானான். தளபதியுடன் பாண்டிய நாட்டுக் குதிரை வீரர்கள் பதின்மர் புறப்பட்டனர். வாட்ட சாட்டமான குதிரையொன்றில் நெடுமாறன் ஏறி அமர்ந்து, துணைத் தளபதிகளை எச்சரிக்கை செய்து விட்டு, அவர்கள் பொறுப்பில் படையினை ஒப்படைத்து விட்டுப் புலவருடன் புகார்த் தலைநகரம் நோக்கிக் கிளம்பினான்.

பாசறையை விட்டு வெகுதூரம் அவர்கள் கடந்து விட்டார்கள். இருமருங்கிலும் புதர்கள் அடர்ந்த குறுகிய பாதையொன்றில் அவர்களின் பயணம் நடந்து கொண்டிருந்தது. சுற்று முற்றும் சுழல்விளக்கென அலைந்து கொண்டிருந்த நெடுமாறனின் விழிகள் புதர் மறைவில் எதையோ கண்டு அசைவற்று நின்றன. திடீரெனக் குதிரையை நிறுத்தினான்.

புலவர் திகைப்படைந்து, “என்ன வேண்டும்!" என்று கேட்டார்.

"ஒன்றுமில்லை?" என்றவாறு குதிரையிலிருந்து இறங்கினான்.

புலவர், அவனையே வியப்புடன் கவனித்துக் கொண்டிருந்தார். மீண்டும் கேட்டார்; "தளபதியாரே! என்ன தேவை? ஏன் இறங்கிவிட்டீர்?"

"இதோ இந்தப் புதரில் படர்ந்திருக்கும் பச்சிலையைப் பார்த்தீர்களா? எல்லா நோய்களையும் நீக்க வல்லது இது! இதைக் கொஞ்சம் பறித்துப் போகலாம்!" என்றான் தளபதி.

“பச்சிலையின் பெயர் என்ன?" என்று கேட்டார் புலவர்!