பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/181

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

188

கலைஞர் மு. கருணாநிதி


கொண்டான் என்றாலும் கரிகால் மன்னனின் கண்கள், அவன் உள்ளத்தில் புயல் இருப்பதைக் கண்டு பிடித்துவிட்டன.

"என்ன, இருங்கோவேளைக் கூண்டோடு சிறைப்படுத்தத் திட்டமிட்டுப் போராட்டம் தொடங்கியிருப்பதாகக் கேள்விப்பட்டேன்! மிக்க மகிழ்ச்சி. ஏற்பாடுகள் எல்லாம் வெற்றிகரமாக நிறைவேறி விட்டன அல்லவா?" என்று பேச்சைத் திருப்பினான் சோழவேந்தன்.

"ஏற்பாடுகள் எல்லாம் வெற்றிகரமாக அமைந்துவிட்டன; எதிரியைச் சந்தடியின்றிப் பிடித்து விட என்னாலியன்ற எல்லா முறைகளையும் மேற்கொண்டேன். ஆனால் எப்படியோ படையெடுப்புப்பற்றி இருங்கோவேளுக்குத் தகவல் போயிருக்கிறது" - நெடுமாறன் பேச்சை முடிக்கவில்லை.

அதற்குள் கரிகாலன் குறுக்கிட்டு, "இருங்கோவேளுக்குத் தகவல் போய் விட்டதென்று எப்படித் தெரியும்?" என்று கேட்டான்.

"தகவல் போனது மட்டுமல்ல, தார்வேந்தே! தலைகுனியும் செய்தி யொன்றும் என் நெஞ்சில் மோதிவிட்டது. எந்தச் செழியனின் விடுதலைக் காக இப்படையெடுப்போ, அந்தச் செழியன் இருங்கோவேளின் நண்ப னாகிவிட்டான். இதோ பாருங்கள்! செழியன் விடுத்துள்ள முடங்கலை! கோழைத்தனமும் துரோக எண்ணமும் கொண்ட கொடியவன் எழுதியுள்ள மடலைப் படியுங்கள்!"

-என்று ஓலையை எடுத்து அரசனிடம் கொடுத்தான். கரிகாலன் அதைப் படித்துப் பார்த்துவிட்டுச் சிந்தனையில் ஆழ்ந்தான். அவன் நினைப்பு முத்துநகையின் மீது சென்றது. அவள் கூறிய வார்த்தைகள் அவன் காதில் ஒலிக்க ஆரம்பித்தன.

"செழியன். இருங்கோவேளின் நண்பனாகி விட்டதாகவும், பாண்டிய மன்னன் செழியனைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை யென்றும் செழியனைக் கொண்டே எழுதப்பட்ட ஓலையாகும் அது. முக்கியமாகப் பாண்டியர் படையெடுப்பைத் தடுத்து அவர்களைத் திரும்பிடச் செய்யவே அந்த ஏற்பாடு. நல்ல வேளையாக அந்தச் சூழ்ச்சியில் இருங்கோவேள் வெற்றியடையவில்லை. நான் குறுக்கிட்டு ஓலையைக் கைப்பற்றி விட்டேன்".

அந்த ஓலை பாண்டிய நாட்டு ஒற்றர் வீரபாண்டியிடம் இருக்கிறது. அந்த வீரபாண்டி மிகவும் நல்லவர். ஒப்பற்ற வீரர். பாண்டிய நாட்டுக்காகத் தன் உயிரையும் பொருட்படுத்தாமல் இருங்கோவேளைச் சுற்றிக் கொண்டு திரிகிறார். படையெடுத்து வரும்படி பாண்டிய நாட்டுக்குத் தகவல் அனுப்பியதே அவர்தானாம். பாவம், ஒரு சாதாரண