பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/189

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ரோமாபுரிப் பாண்டியன்

197


"ஏன் மன்னவா? என் பணியில் என்ன பழுது கண்டீர்கள்? நான் செய்த தவறென்ன?"

"பணியில் பழுதில்லை பாவையே! உன் தந்தையின் கவலையைப் போக்குவதற்காக உன்னை வீட்டுக்கு அனுப்பத் தீர்மானித்திருக்கிறேன். அது மட்டுமல்ல; நானும் ஒற்றரும் சந்தித்த பிறகு செழியனை எப்படியும் மீட்டே தீர்வோம்; அதற்கான திட்டங்களைப் பாண்டிய நாட்டுத் தளபதியுடனும் ஒற்றர் வீரபாண்டியுடனும் வகுப்பதாக இருக்கிறேன். இனி உனக்குச் சிரமம் தேவையில்லை அல்லவா!"

"வேந்தே! செழியனை மீட்பது மட்டுமல்ல என் வேலை; சோழத் திருநகரில் தாங்கள் நினைக்காத இடங்களில் துரோகிகள் தோன்றியிருக்கிறார்கள்; அவர்களைக் கூண்டோடு பிடிக்கும் வரையில் எனக்கும் ஓய்வில்லை."

"வெளுத்ததெல்லாம் பால் எனக் கருதும் உன்னைப் போன்ற வெள்ளை உள்ளங்கள் அந்த வேலைக்குத் தகுதியில்லை என்பது என் எண்ணம்"

இந்தப் பதிலைக் கேட்டதும் முத்துநகைக்கு முகம் கருத்துப் போய் விட்டது. கண்கள் கலங்கி விட்டன.

ஆனாலும் சமாளித்துக் கொண்டு, "மன்னர் மன்னவா! என்னை மன்னித்துவிடுங்கள்! என் பணிக்குத் தங்களின் துணை இல்லாவிட்டாலும் தனியொருத்தியாக நின்று சோழநாட்டுப் புகழைக் காப்பாற்றப் போராடியே தீருவேன்!" என்று குரல் தழுதழுக்கக் கூறினாள்.

அப்போது புலவர் வீட்டுக்குச் சென்ற வீரன் திரும்பி வந்து கரிகாலனிடம், "அரசே! புலவர் முக்கியமாக யாருடனோ பேசிக் கொண்டிருக்கிறார்; விரைவில் வருவதாக அறிவித்தார்" என்று கூறினான்.

வீரன், முத்துநகைக்கு நேராக அந்தச் செய்தியைச் சொன்னது சோழனுக்குப் பிடிக்கவில்லை. அந்த ஆத்திரத்தில் வீரனைப் பார்த்து, "அப்படி யாருடன் அவ்வளவு முக்கியமாகப் பேசிக் கொண்டிருக்கிறார்?" என்று கூவினான்.

வீரன் சொன்னான்; "அவரும் ஒரு யவனக் கிழவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்" என்று!

அந்தப் பதில் வெளி வந்ததுதான் தாமதம், "அகப்பட்டுக் கொண்டான் இருங்கோவேள்! அரசே! இப்போதே படைகளை அனுப்பி அந்த யவனக் கிழவனைக் கைது செய்ய உத்தரவிடுங்கள்” என்று முத்துநகை கத்தினாள்.