பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/192

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

200

கலைஞர் மு. கருணாநிதி


எழுந்தான். எழுந்த வேகத்தில் இடுப்பில் செருகியிருந்த கட்டாரியை உருவிக் கொண்டு கரிகாலன் மீது பாய்ந்தான். கட்டாரியால் கரிகாலனின் நெஞ்சில் பலங்கொண்ட மட்டும் குத்தினான்.

ஆனால் கரிகாலனுக்குச் சிறு காயமும் ஏற்படவில்லை. மார்பில் மறைந்திருந்த கவசம் கட்டாரியை முனை மழுங்கச் செய்தது. அதற்குள் திரைமறைவில் இருந்த வீரர்கள் வெளிப்பட்டனர். ஒற்றனை வளைத்துக் கொண்டனர். முத்துநகைக்குத் தன் கண்களையே நம்ப முடியவில்லை. கரிகாலன் உயிர் தப்பி நிற்பதையும், தன் அன்பு அத்தான் வீரபாண்டி கைது செய்யப்பட்டு நிற்பதையும் கண்டு தணலில் நிற்பது போல் நின்றாள்.

அரசன் அவளைப் பார்த்து, "முட்டாள் பெண்ணே! நீ அழைத்து வந்த ஒற்றன் யார் என்று தெரிகிறதா? வீரபாண்டியல்ல என்பதைப் புரிந்து கொள்! வேடமிட்டு என்னைக் கொல்ல வந்த இருங்கோவேள் இவன்தான்!" என்று கூறி அவன் தலைமுடி, உடை முதலியவற்றைப் பற்றியிழுத்து வேடத்தைக் கலைத்து விட்டான்.

என்ன ஆச்சரியம்!

அரசன் எதிர்பார்த்தபடி அவன் இருங்கோவேளுமல்ல, அவள் நினைத்திருந்தபடி அவன் வீரபாண்டியுமல்ல!

அரசன் திகைத்து நின்றான்.முத்துநகை கூச்சலிட்டாள்.

"அரசே! இவன் நான் அழைத்து வந்த ஒற்றர் வீரபாண்டியல்ல! வேந்தர் பெருந்தகையே! நான் தங்களிடம் இன்னொரு உண்மையையும் கூறுகிறேன். வீரபாண்டி கிழவர் அல்ல. கிழவர் போல வேடமிட்டுத் தங்களைக் காண வந்தார். அவரல்ல இது! எப்படியோ அவர் மறைக்கப் பட்டு அந்த வேடத்தில் இந்தக் கொலைகாரன் வந்திருக்கிறான்!"

முத்துநகையின் கூச்சலைக் கேட்ட அரசர் குழப்பமுற்றவராய். "இப்போது நீ என்ன உளறுகிறாய்!" என்று கத்தினார்.

"என்னை மன்னித்து விடுங்கள். வீரபாண்டியும் நானும் காதலர்கள். அந்த விஷயத்தைத் தாங்கள் புரிந்து கொள்ளக்கூடாது என்பதற்காகவே அவர் கிழவேடம் கட்டிக் கொண்டு தங்களைக் காண வந்தார். இடையில் இந்த விபரீதம் எப்படி ஏற்பட்டது என்று எனக்குப் புரியவில்லை;" என்று விம்மி விம்மி அழுதாள் முத்துநகை.