ரோமாபுரிப் பாண்டியன்
207
வந்து அவர் முகத்துக்கு நேரே தன் முகத்தை நீட்டி "உமது மகள் என்று சொல்லிக் கொள்ள நான் வெட்கப்படுகிறேன்" என்று மெதுவாகத்தான் சொன்னாள். ஆனால் அந்த வார்த்தைகள் எரிமலையிலிருந்து பொங்கி வழியும் அனற் குழம்பினையொத்திருந்தன. புலவர் அவளை அன்புடன் நோக்கியவாறு, "அருமை மகளே! அவசரப்படாதே!" என்று பதில் கூறினார்.
"இனிமேல் அவசரப்படுவதற்கோ - அமைதியடைவதற்கோ என்ன இருக்கிறது? தமிழ்ப் புலவர் கூட்டத்திற்கே அவமானச் சின்னமாக அழிக்க முடியாத களங்கமாக நீர் நிற்கிறீர்! தமிழுக்கு உயிர்ச் சக்தி உண்டென்பது பொய்யில்லையே -அங்ஙனமிருக்க எவ்வாறு அந்தச் சக்தி உமது துரோக இதயத்தை இதுவரையில் துளைக்காமல் மௌனம் சாதிக்கிறது?" - என இடிமுழக்கம் செய்தாள் முத்துநகை.
"அம்மா-முத்து! அரசரும் நீயும் என்னைப் பற்றித் தவறான எண்ணங்கொள்ளுவதற்குக் காரணமாக இருந்த சூழ்நிலை என்ன வென்று யான் அறியலாமா?"
புலவர் அதிர்ச்சியுடன் கேட்டார்.
"சூழ்நிலையை வேறு விளக்க வேண்டுமோ? இந்நாட்டின் நல்வாழ்வு தவிர வேறெதுவும் தேவையில்லையென்று முடிவுகட்டிக் கிளம்பிவிட்ட இந்த முத்துநகையின் தந்தை ஒரு துரோகி, சோழ மண்டலத்தைப் பகைவனுக்குக் காட்டிக் கொடுக்கும் பாவி, கரிகால் மன்னரின் உயிருக்கு உலை வைக்கப் புறப்பட்டிருக்கும் கயவர்களுக்குத் துணை, எந்தச் சோழ நாட்டு மண்மீது சுதந்திரத் தமிழ்க் கவிதைகளை இயற்றினாரோ, அந்தச் சோழ நாட்டுக்கு அழிவு தேடித் தரும் அக்கிரமக்காரர்! இதை விட வேறென்ன தந்தையே வேண்டும்?"
மகளின் பேச்சு, புலவரின் நெஞ்சில் சம்மட்டி அடிகளாய் விழுந்தன.
"முத்துநகை! விளையாட்டுத்தனமாகப் பேசாதே! தமிழால் வளர்ந்தது இந்த உடம்பு. துரோகம் என்னுடைய இரத்தத் துளியில் ஒரு சிறு அணுவைக் கூடத் தொடத் துணியாது என்பதை மறந்து விடாதே!"
"ஆகா! இந்தப் பேச்சில் என் தந்தையின் கற்பனை வளம் காணப்படுகிறது. ஆனால் தூய்மை, மருந்துக்குக் கூட இல்லை. துரோகம் தலைதூக்கி நிற்கிறது."
"இனி உன்னோடு பேசிப் பயனில்லை. தமிழ்ப் புலவர்களின் உள்ளத்தைப் புரிந்து கொண்டிருக்கும் தார் வேந்தர் சோழ மன்னரிடம் பேசுகிறேன். அரசே, என் மகள் முத்துநகை, தங்களையும் சேர்த்துக்