பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/200

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ரோமாபுரிப் பாண்டியன்

209


"இவர் சொல்வதென்ன... அரசே! அதுதான் நன்றாகத் தெரிகிறதே இருங்கோவேள்தான்... என்று!"

"உம் அதுவும் சரிதான்! என் அருமை மகள் முத்துநகை கூறுவதுபோல் யவனக்கிழவராக வந்தவர் இருங்கோவேள் தான்! அப்படித்தான் இருக்கட்டுமே!"

-புலவர் இதைக் கூறிவிட்டு தலையைக் குனிந்து கொண்டார். அதற்குமேல் அவர் பேச விரும்பவில்லையென்பதை அவர் முகம் தெளிவாகக் காட்டியது. முத்துநகையின் ஆத்திரமும் ஆவேசமும் அழுகையாக மாறின; கண்ணீர் பெருக்கெடுக்க, கதறிப் புலம்ப ஆரம்பித்து விட்டாள்.

"அய்யோ! தலைமுறை தலைமுறைக்கும் மாறாத களங்கம் ஏற்பட்டு விட்டதே எங்கள் குடும்பத்துக்கு! அப்பா! அப்பா! ஏனப்பா உங்கள் அறிவு இப்படியெல்லாம் அழிவுச் சக்திகளுக்கு துணை போயிற்று? சோழப் பேரரசில் உங்களுக்கு என்ன குறை? கொலு மண்டபத்தில் அமர்ந்து கோலோச்ச வேண்டுமெனக் கேட்டிருந்தாலும் அட்டியின்றித் தரக்கூடிய குணாளன் தானே நமது கொற்றவன் ! அவருக்குப் பாதகம் நினைக்க எப்படியப்பா உங்கள் மனம் துணிந்தது? அரசே! அரசே! என்னை மன்னித்து விடுங்கள். இந்தத் துரோகியின் வீட்டில் நான் பெண்ணாய்ப் பிறந்ததற்கு என்னை மன்னித்து விடுங்கள்."

முத்துநகை அலறித் துடிப்பதைக் கண்ட கரிகாலன் அவளைச் சமாதானப்படுத்தி, "அழாதே முத்துநகை. தந்தை செய்த தவறுக்கு நீ என்ன செய்வாய்? உன் தந்தையின் களங்கத்தை மறைத்துப் புதிய ஒளியைப் பரப்புகிற அளவுக்குக் குடும்ப விளக்காக நீ திகழ்கிறாய். நீ தியாகச் சுடர். சோழ மண்டலத்தின் பெருமையைக் காப்பாற்றுவ தொன்றே பெரிதெனக் கொண்டு தந்தையையும் காட்டிக் கொடுத்த உன் நெஞ்சுறுதியை-தாயகப்பற்றை-நான் மதிக்கிறேன். உன் உறுதிக்கும் துணிவுக்கும் மரியாதை செலுத்துகிறேன். நீ நாட்டுக்குத் தியாகம் செய்கிறாய்; உன் தந்தை நண்பனுக்காகத் தியாகம் செய்கிறார்" என்று கண் கலங்கக் கூறிவிட்டுப் புலவரைப் பார்த்து,

"வணக்கத்துக்குரிய தமிழ்ப்பாவாணரே! நானொருவன் வாழ்வது பிடிக்கவில்லையென்றால் என் மார்பில் வேல் நுழைத்திருக்கலாம் தாங்கள்! அதை விடுத்துத் தாயகத்தை எதிரிக்குக் காட்டிக் கொடுக்கும் இழி செயலை மேற்கொண்டிருக்கத் தேவையில்லை. போனது போகட்டும். நீதிக்கு முன்பு தரணியாளும் மன்னரும் தமிழால் உலகை ஆளும் புலவரும் ஒன்றுதான். நீதி கிடைப்பதற்குப் பெரிதும் முயல்கிறேன். அதுவரையில் தாங்கள் அரண்மனையிலேயே சிறைப்படுத்தப்-